125. ஊராதி யிகழ்மாயக் கயிற்றாற் கட்டுண்
டோய்ந்தலறி மனம் குழைந்திங் குழலுகின்றேன்
பாராதி யண்டமெலாம் கணத்திற் காண்போய்
பாவியேன் முகவாட்டம் பார்த்தி லாயோ
சீராதி பகவனருட் செல்வமே யென்
சிந்தை மலர்ந்திட வூறுந் தேனே யின்பம்
சாராதி மலைத் தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
உரை: இன்பம் பொருந்திய ஆதி மலையாகிய தணிகையில் எழுந்தருளும் மணியே, சீவ காட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வே, ஊரும் நாடும் முதலாய உலகம் இகழ்ந்துரைக்கும் மாயக் கயிற்றால் கட்டுற்று, உடல் ஓய்ந்து வாயால் அலறி மனம் கரைந்து இங்கே வருந்துகின்றேனாக, நிலவுலகு முதலிய அண்டங்களெல்லா வற்றையும் கணப்பொழுதில் கண்டறிபவனாகிய நீ பாவியாகிய எனது முகத்தில் வெளிப்பட்டுத் தோன்றும் வாட்டத்தைப் பார்க்க வில்லையோ? சிறப்புடைய ஆதி சத்தியொடு கூடிய பகவானாகிய சிவனருளிய அருட் செல்வமே, எளியேனுடைய மனமாகிய மலர் மகிழ்ச்சியால் மலருமாறு உள்ளே சுரக்கின்ற தேனாகிய பெருமானே, கடைக்கண் பார்த்தருள்வாயாக, எ.று.
தணிகைமலை ஆதிமலை யெனவும் கூறப்படும் என்பர். இன்பம் தரும் வளம் பொருந்தியது ஆதிமலை என்றுமாம். சிவன் வீராட்டகாசம் செய்த மலையாதல் பற்றி இவ்வாறு கூறினார் எனினும் பொருந்தும் என்க. இதனைத் தணிகைப்புராணத்து வீராட்டகாசப் படலம் விரித்துரைக்கிறது. ஊராதி - ஊர்களை யாதியாக வுடைய நிலவுலகம்; அன்மொழித் தொகை. “ஊர் பரந்தவுலகு” (பிரமபுரம்) என்பர் ஞானசம்பந்தர். மாயா காரியமாய் வாழும் உயிர்களை மயக்குவது பற்றி, “ஊராதி இகழ் மாயக் கயிறு” எனவும், மெய்யுணர்ந்த சான்றோரால் இகழப்படுவது தோன்ற “இகழ்மாயக் கயிறு” எனவும் குறிக்கின்றார். மாயையின் மயக்கம் கயிறு எனப்படுகிறது. மாயா காரியம் யாவும் நிலையாதனவாகியும் நிலையுடையன போலத் தோன்றி உயிர்கட்கு எளிதில் விடலாகாத பற்று விளைவித்துப் பிணித்தலின், “மாயக் கயிற்றால் கட்டுண்டு” என்று கூறப்படுகிறது. மாயா காரியமாகிய உடலும் பொருளும் உலகும் எத்துணைத் துன்பம் நல்கினும் விட்டுப் பிரியாவாறு உயிர்களை அவற்றோடு பிணித்திருப்பது கண்கூடு. இதனை மேனாட்டுக் கவிஞரான கோல்டுசுமித் என்பவர், நீளும் சங்கிலித் தொடர் (Lengthening chain) என உரைக்கின்றார். “இழத்தொறும் காதலிக்கும் சூதே போல் துன்பம், உழத்தொறும் காதற்றுயிர்” (குறள்) எனபர் திருவள்ளுவர். துன்பமே பயத்தலால் ஆற்றாமை யுற்று உடம்பு ஓய்ந்து போவதும் வாய்புலர அலறியழுவதும் மனம் கரைந் தொழிவதும் இயல்பாதலால், “ஓய்ந்தலறி மனம் குழைந்து” எனவும் மாய வுலகினின்றும் நீங்க மாட்டாமையால் “இங்கு” எனவும், ஓய்தலும் அலறுதலும் பிறவும் செய்தும் துன்பத்தினின்றும் நீங்காமல் வருந்துவது விளங்க, “உழலுகின்றேன்” எனவும் எடுத்துரைக்கின்றார். இஃது என் பாவவினை காரணமாக உளதாயதையும் உணர்கிறேன் என்பாராய், “பாவியேன்” என்றும், அருளே உருவாயமைந்த நீ என் முக வாட்டம் காணின் அருள் புரியாதொழியாய்; கண்டிலை போலும் என்பார், “முக வாட்டம் பார்த்திலாயோ” என்றும் இயம்புகின்றார். பாரா தொழியும் குறைபாடு உனக்கில்லை என்றற்குப் “பாராதி அண்டமெலாம் கணத்தில் காண்போய்” எனக் கூறுகிறார். ஆகவே எல்லாவற்றையும் கணப்பொழுதில் எஞ்சாமற் பார்த்தருளும் இறையாகிய நின் திருக்கண்ணிற் படாதபடி என் பாவம் இடை நின்று மறைத்து விட்டது போலும் என்பது குறிப்பெச்சம்.
இதனால் மாயா காரிய உலக வாழ்க்கைப் பிணிப்பாகிய கயிற்றாற் கட்டுண்டு துன்புற்று வருந்தும் என்னை ஞான நாட்டத்தாற் கண்டு அருள் புரிக என்று வேண்டியவாறாம். (23)
|