1251. குன்றேர் முலைச்சியர் வன்மல ஊத்தைக் குழியில்மனம்
சென்றே விழுகின்ற தென்னைசெய் கேன்எம் சிவக்கொழுந்தே
நன்றே சதானந்த நாயக மேமறை நான்கினுக்கும்
ஒன்றே உயர்ஒளி யேஒற்றி யூர்எம் உயிர்த்துணையே.
உரை: சிவக்கொழுந்தே, நன்மையின் திருவுருவமே, மெய்யின்பத் தலைவனே, வேத நான்கிற்கும் ஒன்றாக வுயர்ந்த ஒளிப்பொருளே, திருவொற்றியூரில் எம்முடைய உயிர்க்குத் துணையானவனே, மலை போன்ற கொங்கைகளையுடைய மங்கையருடைய மலக்குழியின்கண் ஆழ்தற் பொருட்டு எனது மனம் சென்று வீழ்கின்றது; இதனை விலக்கற்கு யான் செய்வது யாது எனத் தெரிகிலேன்! எ.று.
இளஞாயிற்றின் ஒளிகொண்டு திகழ்தலின் சிவத்தைச், “சிவக்கொழுந்து” என்கின்றார். “இளஞாயிறின் சோதி யன்னான்” (ஆலந்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. அல்லதென விலக்கத்தக்க ஒரு சிறு குறையுமின்றி நலமென்பவை யனைத்தும் திரண்ட பரம்பொருளாதலின் “நன்றே” எனவும், எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய இன்ப வடிவினனாதல் பற்றிச் “சதானந்த நாயகனே” எனவும், மறைகள் நான்காயினும் தான் ஒருவனே அவையனைத்திற்கும் பொருளாதலின், “மறை நான்கினுக்கும் ஒன்றே” என்றும், பேரொளியாய்த் திகழ்தலின், “உயர் ஒளியே” எனவும், உயிர்கட்கெல்லாம் உறுதுணையாய் நிற்றலின், “உயிர் துணையே” எனவும் உரைக்கின்றார். முலையையுடைய பெண்டிரை முலைச்சி என்னும் வழக்குப்பற்றி மகளிரை “முலைச்சியர்”என்கிறார். மகளிர் கூட்டத்தில் உளதாகிய அருவருப்பை, “வன்மல ஊத்தைக் குழியில் மனம் சென்றே விழுகின்றது” என்று உரைக்கின்றார். ஊத்தைக் குழி - மலம் நிறைந்த குழி. வீழும் இடத்தின் புன்மை யுணர்ந்தும் சென்று வீழும் மனத்தின் கீழ்மையை விலக்க மாட்டாமை புலப்படுத்தற்கு, “என்னை செய்கேன்” என இயம்புகின்றார்.
இதனால், மகளிர் கூட்டத்திற் காணப்படும் அருவருப்பை ஓதி விலக்கியவாறாம். (9)
|