பக்கம் எண் :

1253.

     பொருளேநின் பொன்னடி உன்னாதென் வன்மனம் பூவையர்தம்
     இருளே புரிகின்ற தென்னைசெய் கேன்அடி யேன்மயங்கும்
     மருளே தவிர்ந்துனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திடநீ
     அருளே அருட்கட லேஒற்றி மாநகர் ஆள்பவனே.

உரை:

      திருவருட் கடலாய்த் திருவொற்றியூர் என்னும் பெரிய நகரத்தை அருளாட்சி புரிபவனே, நின்னுடைய அழகிய திருவடியே பொருளாம் எனக் கருதாமல், என் கொடிய மனம் மகளிர் கூட்டத்து விளையும் மயக்க விருளையே விளைவித்துக் கொள்கின்றமையால், அடியேன் மயங்குதற் கேதுவாய மருட்சியைப் போக்கி, யான் உன்னையே வாழ்த்தி வணங்கி மகிழ்ந்து உய்திபெற அருள் செய்வாயாக. எ.று.

     அருளே திருமேனியாக வுடையவனாய், அளவிறந்த பெருமை யுடையவனாய் விளங்குதலின் “அருட்கடலே” என்கின்றார். உயிர்க்கு உறுதிப் பொருளாவது உன்னுடைய திருவடியே என்று எண்ணாமல் மகளிர் கூட்டத்தையே எண்ணி வருந்தும் மனத்தின் ஏழைமையை எடுத்தோதுவோர், “பொருளே நின் பொன்னடி உன்னாது என் மனம் இருளே புரிகின்றது” என்று வருந்துகின்றார். பல்வகைப் பொருளுரை கூறித் தெருட்டினும் தெரியாமல் காமவேட்கையில் இறுகி நிற்பதுபற்றி, “வன்மனம்“ என்றும், பூவாலும் பிற புனைவுகளாலும் தம்மை ஒப்பனை செய்து, காம நிலையமாக்குவதையே நினைத்து, மனத்தை இருளால் நிறைத்துக் கொண்டிருத்தலின், அவர் சூழலிற் செல்லும் உள்ளத்தைப் “பூவையர்தம் இருளே புரிகின்றது” என்றும், இந்நிலைமைக்கு இரங்குவதல்லது வேறு யாதும் செய்தற்கின்றமையின், “என்னை செய்கேன்” என்றும் கலங்கியுரைக்கின்றார். எனது இந்நிலைமையை நீட விடின், விளைவது பெருந்துன்பமாகலின், இதற்கேதுவாகிய மருட்சியுணர்வைப் போக்கி, வன்மைசான்ற ஞானத் தெளிவினை நல்கி, அதுகொண்டு உன்னை வாழ்த்தி வணங்கி உய்தி பெற அருள்வாயாக என்பார், “மயங்கும் மருளே தவிர்ந்து உனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திட நீ அருள்” என வேண்டுகிறார்.

     இதனால், மன மருட்சி நீங்க அருள் புரிக என வேண்டியவாறாம்.

     (11)