பக்கம் எண் :

1255.

     முன்னேசெய் வெவ்வினைதான் மூண்டதுவோ அல்லதுநான்
     இன்னே பிழைதான் இயற்றியதுண் டோஅறியேன்
     பொன்னேர் புரிசடைஎம் புண்ணியனே என்நோயை
     அன்னேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.

உரை:

      பொன்னால் திரித்தது போன்ற சடையை யுடையவனே, புண்ணியப் பொருளாயவனே, முற்பிறவிகளிற் செய்த வெவ்விய தீவினைப் பயன்தான் வந்து பற்றிக் கொண்டதோ, இப்பிறவியில் செய்த குற்றம் காரணமாக வுண்டாயதோ எனக்கு வந்துள்ள நோய்? இன்னதென அறியேன்; அன்னையைப் போன்ற நீ இதனை நீக்காயாயின் வேறே எவர்தாம் இதனை நீக்க வல்லவராவர்? எ.று.

      பொன்னால் திரிக்கப்பட்டது போல்வது பற்றிப் “பொன்னேர் புரிசடை” எனப் புகல்கின்றார். “பொன் புரிந்த செஞ்சடைக்கு வெள்ளிப் புரி புரிக்கும் வெண்டிங்கட் கண்ணி” (சிதம். செய், கோ. 19) எனக் குமரகுருபரர் கூறுவது காண்க. புண்ணியப் பொருளாவதால் புண்ணியன் என்று குறிக்கின்றார். தமக்கு வந்துள்ள நோய்க் காரணத்தை எண்ணுகின்றாராதலால், காரணமாய வினைகளில் முன்னைய வையா இம்மையிற் செய்தவையா என ஆராய்பவர், முன்னைப் பிறப்புக்களில் ஈட்டப்பட்ட வினைகளோ என நினைப்பாராய், “முன்னே செய் வெவ்வினைதான் மூண்டதுவோ” என்று சொல்லுகின்றார். காரணத்தின் பண்பே காரியத்தின்பாலும் உளதாம் என்னும் முறைமை பற்றித் தாக்கும் நோயின் வெம்மை நோக்கி, முன்னை வினையின் வெம்மையை நினைந்து “முன்னே செய் வெவ்வினை” என மொழிந்து, அதுதான் வந்து சூழ்ந்து கொண்டதோ என எண்ணுகிறார். உண்மை துணியப் படாமையின், இம்மையிற் செய்த வினை வகையும் ஏதுவாகலாம் என்றோ ரெண்ணம் எழுதலால், “அல்லது, நான் இன்னே பிழைதான் இயற்றிய துண்டோ” என்று கூறுகின்றார், தெளிவு பிறவாமையால் “அறியேன்” என உரைக்கின்றார். இவ்வாறே, “இம்மைச் செய்தன யானறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது” (சிலப். 15:91-3) என எய்திய நோய் கண்டு காரணமாகிய வினை யாராயப் படுவது அறிஞர் இயல்பென அறிக. வினை வகைகளைக் கண்டு அவற்றின் பயன்களைச் செய்வோரை நுகர்விப்பவன் நீயாதலின், நின்னை யன்றி வினைவிளைவாகத் தோன்றியுள்ள நோயை நீக்க வல்லவர் பிறர் இல்லை என்பாராய், “என் நோயை நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே” என்று முறையிடுகின்றார்.

     இதனால், நோய்க் கேதுவாகிய வினைக் கூறுகளை எண்ணி இறைவனை வேண்டியவாறாம்.

     (2)