பக்கம் எண் :

1258.

     பொய்யாம் மலஇருட்டுப் பொத்தரிடை வீழ்ந்துழலும்
     கையாம் நெறியேன் கலங்கவந்த வெம்பிணியை
     மையார் மிடற்றெம் மருந்தே மணியேஎன்
     ஐயாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.

உரை:

     கரிய திறத்தை யுடையனாய் எமக்கு மருந்தும் மணியுமாகியவனே, என் ஐயனே, பொய்யான மலத்தா லுளதாகும் இருட்குழியில் வீழ்ந்து வருந்தும் சிறு நெறியை யுடைய யான் மனம் கலங்குமாறு வந்து வருத்துகின்ற வெவ்விய நோயை நீ நீக்கவில்லையாயின், வேறு யாவர்தான் நீக்க வல்லவராவர்? எ.று.

      கடல் நஞ்சினை யுண்ட கழுத்து நிறம் கருகி யிருப்பது பற்றி, “மையார் மிடறு” என்று சிறப்பிக்கின்றார். மை - கருமை. சித்த மருத்துவ நெறியினர், நோயாளர் வரின், அவரது நோயின் வன்மை மென்மை நோக்கி மருந்து தருதலும், மணி கட்டுதலும், மந்திரம் ஓதுதலும் மரபு. அதுபற்றியே மணி மந்திர ஒளடதம் என்ற பழமொழியும் அவரிடையே வழங்குகிறது. இந்நெறியை மேற்கொண்ட சைவர்கள் பிறவி நோய்க்கு மருந்து திருநீறு எனவும், மணி திருவுருத்திராக்க மெனவும், மந்திரம் திருவைந்தெழுத் தெனவும் தெரிவிக்கின்றார்கள். திருநீலகண்டம் மந்திரமாகவும், சிவனே மருந்தும் மணியுமாகவும் கொள்ள “மையார் மிடற்றெம் மருந்தே மணியே” என்ற தொடர் நிகழ்கின்றது. உயிரைப் பற்றி நிற்கும் மூல மலம் காரணமாகப் பொய் முதலிய குற்றங்கள் உளவாகலின், “பொய்யாம் மலவிருட்டு” எனவும், மேடு பள்ளங்கள் இரண்டுமே இருளில் கீழே வீழ்த்துவதால் “பொத்தர்” எனவும், இடம் குறுகிய வழி செல்வார்க்கு இடர் விளைவித்துக் கீழே வீழ்த்தும் இயல்பினதாதலால் “வீழ்ந்துழலும் கையாம் நெறி” எனவும் கூறுகின்றார். கை - சிறுமை. பொத்தர் - குழி; பள்ளமுமாம். ஆழ்ந்த குழிகள் இருள் படிந்திருப்பது பற்றி, “இருட்டுப் பொத்தர்” எனப்படுகிறது. மலம் காரணமாகப் பிறக்கும் பொய் முதலிய குற்றங்களைச் செய்து சிறுமையுறும் நான் வெவ்விய நோயுற்று அறிவு கலங்குகின்றேன் என்பார், “கலங்க வந்த வெம்பிணி” எனக் குறிக்கின்றார்.

இதனால், மலம் காரணமாக நோயுற்றுக் கலக்க முறுகின்றமை தெரிவித்தவாறாம்.

     (5)