126. வாவென்பா ரின்றியுன தன்பர் என்னை
வஞ்சக னென்றே மறுத்து வன்கணா நீ
போவென் பாராகி லெங்குப் போவே னந்தோ
பொய்யனேன் துணையின்றிப் புலம்புவேனே
கோவென்பார்க் கருள்தருமக் குன்றே யொன்றே
குணங்குறி யற்றிட வருளும் குருவே வாழ்க்கைத்
தாவென்பார் புகழ் தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
உரை: நல்வாழ்வு தருக என வேண்டுவார் புகழ்கின்ற தணிகை மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வே, தலைவனே என்று பணிபவர்க்கு வேண்டுவன நல்கி யருளும் தரும குணமலையே, ஒன்றாகிய பரம்பொருளே, குணங் குறிகளைக் கடந்த சிவமாந்தன்மை எய்தற்குரிய ஞான மருளும் குரு முதல்வனே, எளியனாகிய யான் நின் திரு முன்பு வரும்போது என்னை வருக என்பவரின்றி என்னை வஞ்சரொடு கூடித் திரிந்த வஞ்சகன் என்று எண்ணி நினக்கு அன்பரா யுள்ளவர் உள்ளே புக விடாது மறுத்து, “வன்கண்மை யுடையவனாகிய நீ வெளியே போ” என்று வைது புறத்தே போக்குவராயின், அந்தோ, பொய்யொழுக்க முடையவனாகிய யான் எங்கே செல்வேன்; புகலிடம் வேறே இல்லை யாதலின், நின் திருவருள் துணையின்றித் தனித்து நின்று வருந்துவேனே, என் செய்வது? எ. று.
உடம்பொடு கூடி மண்ணுலகில் வாழச்செய்த முதல்வனாதலால், வாழ்தற்கு வேண்டுவன அளித்தருளுக எனப் பணிந்திரப்பது மெய்யுணர் வுடைய நன்மக்கள் இயல்பாதலின், அவர்கள் தணிகைப் பதி போந்து அதனைப் புகழ்ந் தேத்தும் நலத்தை, “வாழ்க்கை தா என்பார் புகழ் தணிகை மணியே” என உரைக்கின்றார். வாழ்க்கை தா என்பது “வாழ்க்கைத்தா” என இசையின்பங் குறித்துத் தகர ஒற்று மிக்கு வந்தது. தாம் எய்திய நலந் தீங்குகட்குத் தலைவன் முருகப் பெருமானாதலைத் தெளிந்து போற்றும் பெருமக்களுக்கு நலங்களை இனிது நுகரவும் தீங்குகளின் நீங்கவும் நல்லருள் செய்யும் திறத்தை, “கோ என்பார்க்கு அருள் தருமக் குன்றே” என்று கூறுகின்றார். ஓருருவும் ஒரு நாமமும் இன்றிப் பல வுருவில் பல திருப்பெயர்களாற் பொலிந்து நிற்பினும் பரம்பொருளாம் நிலையில் ஒன்றே யாதலால், “ஒன்றே” எனவும், பரம்பொருள் பற்றிய பர ஞானத்தைப் பெறச் சமைந்தவர்க்கு உலகில் ஞானிகட்குரிய குணமும் குறியும் வேண்டாதன வாதலால், “குணம் குறி யற்றிட அருளும் குருவே” எனவும் இயம்புகின்றார். குறி, பெயரும் புகழும் பிறவுமாம். யாவராயினும் வருவாரை வருக என்று சொல்லி வரவேற்றல் அன்பு நெறி. இது பண்புடையாரிடத் தன்றி அஃது இல்லாத பலரிடத்து அமையாமையைக் கண்டவராதலால், வள்ளர் பெருமான் நினக்கு அன்பராயினும் அன்பு மிகுதியால் வஞ்ச மக்களோடு கூடித்திரிந்த என் புன்மை நோக்கி வருக என்று என்னை ஏலா தொழிதற்கு இடமுண்டென் பாராய், “வா என்பார் இன்றி” என்றும், என் கொடுமையும் குற்றமும் எடுத்துரைத்து மறுத்துப் புறத்தே செல்ல விடுவது திருவருட்பைங் கூழ் வளரும் வள வயலில் களை புகாவாறு தடுக்கும் நற்பணி யெனக் கருதிச் செய்வாராயின் புகலிடம் வேறே எனக்கு இல்லையாதலால் என்ன செய்வேன் என்பாராய், “உனது அன்பர் என்னை வஞ்சகன் என்றே மறுத்து வன்கணா நீபோ என்பாராகில் எங்குப் போவேன்” என்றும் கூறுகின்றார். உனது அன்பர்- உனது அன்பைப் பெற்றுடையவர். எனது வரவும் உறவும் அவருடைய அன்புக்கு ஊறு செய்யும் எனக் கருதுவதால் வா என்று சொல்லாமல் வஞ்சகன் என்று சொல்லி மறுப்பர் எனவும், வன் கண்மையுடைமை காட்டி ஈங்கு நீ புகுதலாகாது என்று இகழ்ந்து வெளியே போ எனப் புறம் போகச் செய்பவர் எனவும் நினைக்கின்றமையின், வள்ளற் பிரான் “போஎன்பாராகில்” எனப் புகல்கின்றார். அருளே யுருவாய முருகனது அன்பைப் பெற்றுடைய பெருமக்கள் ஏனை மக்கள் அனைவரையும் தாயெனப் பரிந்து ஒக்கநோக்கும் உயர்பண்பினராதலால் அவ்வாறு செய்யார் என்பதை “ஆகில்” என்னும் சொல் குறிப்பது காண்க. சத்தல்லாத பொய் துணையாகா தென்றற்குப் “பொய்யனேன்”
என்றும், திருவருளாகிய துணையில்லாதார்க்குப் போக்கிடமில்லை என்பது பற்றித் “துணையின்றிப் புலம்புவேனே” என்றும் உரைக்கின்றார். புலம்பு-தனிமை; அழுதலுமாம். தனிமை அறிவொளி வேண்டிச் சிந்தித்தற்கும் அறியாமை பற்றி அழுதற்கும் உரித்தென அறிக.
இதன்கண் என்னைப் புறம் போக்காமல் இன்சொல் கூறித் தம்மோடு ஏற்குமாறு நினது அன்பர்க்குச் சொல்லி யருளுக என வேண்டுமாறு காணலாம். (24)
|