1261. இத்தா ரணியில் எளியோரைக் கண்டுமிக
வித்தாரம் பேசும் வெறியேன்தன் மெய்ப்பிணியைக்
கொத்தார் குழலிஒரு கூறுடைய கோவேஎன்
அத்தாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
உரை: கொத்தான பூக்களையணிந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு கூறாகவுடைய திருமேனி கொண்ட தலைவனே, எனக்குத் தந்தையே, இந்நிலவுலகில் எளிய மக்களைக் கண்டால் வித்தாரம் பேசும் அறிவில்லாத யான் உற்ற உடல் நோயை நீ நீக்காவிடில் நீக்க வல்லவர் வேறே எவருமில்லை. எ.று.
கொத்தார் குழலி - கொத்துக் கொத்தாக மலரும் பூக்களாலாகிய மாலையையணிந்த கூந்தலையுடையவள். தாரணி - நிலவுலகு; ஈண்டுத் தமிழ்நாட்டின் மேற்று. நிரம்பிய கல்வியில்லாத மக்களை, “எளியோர்” என்கிறார். வித்தாரம் - இல்லன புனைந்து விரிவாகப் பேசுதல். நல்லறி வில்லாதவன் என்றற்கு, “வெறியேன்” என்கிறார்.
இதனால், தமது வெறும் வாய் வன்மை நோய் நீக்க மாட்டாமை தெரிவித்தவாறாம். (8)
|