1262. தறியேர் விழியார் மயக்கினிடை மாழாந்த
சிறியேன் அடியேன் தியங்கவந்த வல்நோயைச்
செறிவே பெறுந்தொண்டர் சிந்தை தனில்ஓங்கும்
அறிவேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
உரை: அடக்கமே பொருளாகக் கொண்ட தொண்டர்களின் மனத்தின்கண் ஒளிர்ந்தோங்கும் ஞானப் பொருளாகியவனே, மானின் விழியையுடைய மகளிர் எழுப்பும் காமமயக்கத்தால் மயங்கி, அறிவு சிறியனாகிய அடியேன் மனம் கலங்குமாறு வந்துள்ள கொடிய நோயை நின்னையன்றி நீக்க வல்லவர் யாவர்? எ.று.
சிவத்தொண்டுக்கு அடக்கத்தினும் சிறந்த பண்பு வேறின்மையின், “செறிவே பெறுந்தொண்டர்” எனச் சிறப்பிக்கின்றார். அவரது சிந்தை, ஞான நினைவுகளால் சிவத்தன்மை யெய்துதலின், “சிந்தைதனில் ஓங்கும் அறிவே” எனப் பாராட்டுகின்றார். மறி - பெண்மான். மருண்ட விழியுடைமை பற்றி மகளிரை, “மறியேர் விழியார்” எனக் குறிக்கின்றார். மகளிரால் விளையும் காம மயக்கம் அறிவைச் சிறுமைப்படுத்தலின், “மயக்கினிடை மாழாந்த சிறியேன்” என்றும், அதனோடு தமதுடலைப் பற்றிய நோய் இறைவன் திருவடியே சிந்திக்கும் தனது உள்ளத்தைச் சிதைப்பது தோன்ற, “அடியேன் தியங்க வந்த வன்னோயை” என்றும் தெரிவிக்கின்றார்.
இதனால், மகளிர் மயக்கத்திற்கு எளியனாகிய தன் சிந்தையை நோய் சிதைக்கின்றமை முறையிட்டவாறாம். (9)
|