பக்கம் எண் :

1263.

     துன்பே சுமையாச் சுமக்கின்ற நாயேனை
     வன்பேசெய் துள்ள மயக்கிநின்ற வன்நோயை
     இன்பே அருள்கின்ற என்ஆ ருயிரேஎன்
     அன்பேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.

உரை:

      இன்பத்தையே செய்வதால் எனது அரிய உயிர் போன்றவனே, அன்பே, துன்பத்தையே மிகவுற்றுச் சுமக்கின்ற நாயினும் கடையான என்னை, வன்கண்மை கொண்டு மனத்தை மயக்கத்தில் ஆழ்த்துகின்ற வலிய பிணியை நீ நீக்காவிடில் வேறே யாவர் நீக்க வல்லார்? எ.று.

     இன்பம் அருளுவதே இறைவனது இயல்பாதலின், “இன்பே அருள்கின்ற என்னாருயிரே” என்கின்றார். இதுபற்றியே, சிவனை வரம்பிலின்பமுடையவன் என்று சிவாகமங்கள் கூறுகின்றன. “அன்பே சிவம்” எனப் பெரியோர் கூறுவது பற்றி, “என் அன்பே” என மொழிகின்றார். தமது கீழ்மைநிலை தோன்ற “நாயேன்” எனவும், தாம் எய்தி வருந்தும் துன்ப மிகுதியை விளக்குவற்குத் “துன்பே சுமையாய்ச் சுமக்கின்ற நாயேன்” எனவும் உரைக்கின்றார். நோய் மிகுதி, உள்ளத்தில் இயல்பாய் அமையும் இரக்கம், அருள் முதலிய மென்மைப் பண்புகளைப் போக்கி மனத்தை மயக்குகின்ற தன்மை புலப்பட, “வன்பே செய்து உள்ளம் மயக்குகின்ற வன்னோய்” என்கின்றார்.

     இதனால், நோயின் கொடுமை மிகுதி கூறியவாறாம்.

     (10)