பக்கம் எண் :

64. பிரசாதப் பதிகம்

புள்ளிருக்குவேளூர்

    அஃதாவது, உயர்ந்தோர் தாழ்ந்தோர்க்கு அருள் மிகுதி புலப்பட ஒன்று சொல்வதும் வழங்குவதும் வடமொழியில் பிரசாதம் எனப்படுதலால், நோய் நீக்கி நலம் விளைவிக்கும் திருவருளைப் பிரசாதம் என்று சிறப்பித்துரைத்தல்.

    இதன்கண் திருவருட்குரிய ஞான, விரத நெறிகளையும், நோய்கள் யாவும் போக்கவல்லது திருவருள் என்பதனையும், அருளே நோய் தீர்மருந்து என்பதனையும், பிற தெய்வங்கள் பிணி நீக்க வல்லவரல்லர் என்பதனையும், எதிர்மறை முகத்தாலும் வற்புறுத்தி, பெத்தநிலை நீங்கத் திருவருட்டுணை வேண்டி, நோய்கள் உயிரறிவைக் கெடுக்காவாறு பாலிக்க வேண்டுகிறார்.

கலிவிருத்தம்

1264.

     சரதத் தால்அன்பர் சார்ந்திடும் நின்திரு
     விரதத் தான்அன்றி வேறொன்றில் தீருமோ
     பரதத் தாண்டவ னேபரி திப்புரி
     வரதத் தாண்டவ னேஇவ்வ ருத்தமே.

உரை:

      பரதம் எனப்படும் திருத்தாண்டவம் செய்பவனே, பரிதிபுரியாகிய புள்ளிருக்குவேளூரில் கோயில் கொண்டருளும் அருட் கூத்தனே, எனக்குண்டாகிய இவ்வருத்தம் மெய்ம்மை நெறியால் மெய்யன்பர் வந்தடையும் நினது திருவருளை நல்கும் விரத ஒழுக்கத்தாலன்றி வேறொன்றால் நீங்கா தன்றோ? எ.று.

     பரதத் தாண்டவம் - பரத நூல்கள் கூறும் கூத்துவகை. சூரியன் வழி்பட்ட சிறப்புப்பற்றிப் புள்ளிருக்கு வேளூருக்குப் பரிதிபுரி என்ற பெயர் கூறப்படுகிறது. இங்குள்ள முருகப் பெருமானைப் பாடும் குமரகுருபரர், “ஓங்கெயிற் பரிதிபுரி முருகனை” எனவும், “வளமை தழுவு பரிதிபுரியின் மருவு குமரன்” எனவும் (முத்து. பிள்) பாடுகின்றார். புள்ளிருக்கும்வேளூர்ச் சிவனைப் பாடிய ஞானசம்பந்தர், “ஆதித்தன் மகனென்ன அகன் ஞாலத் தவரோடும், போதித்த சடா யென்பான் புள்ளிருக்கு வேளூரே” (புள். வே) என்று புகழ்கின்றார். சடாயு ஆதித்தன் மகனாதலால், அவனையும் ஆதித்தனாக்கி அவன் வழிபட்டதனால், புள்ளிருக்கு வேளூரை ஆதித்தபுரி என்ற கருத்தில் பரிதிபுரி எனப் பிற்காலத்தார் கருதிக்கொண்டனர் போலும். பரிதிபுரி யென்பதற்குக் குறிப்புரை எழுதிய டாக்டர் உ.வே. சாமிநாதய்யர், “சூரியன் இத்தலத்தில் வழிப்பட்டமையை இப்பெயர் வலியுறுத்துகின்றது” என உரைக்கின்றார். வரதத் தாண்டவம் - அருள் ஞானக் கூத்து. வருத்தம் - பிறவித் துன்பம். சரதம் - மெய்ம்மை. சிவஞானச் செந்நெறி மெய்ந்நெறி எனப்படுவது பற்றிச் “சரதத்தால்” என்று கூறுகிறார். “இலம் மெய்ந் நெறி சிவநெறி” (ஞானசம். பு) எனச் சேக்கிழார் பெருமான் தெரிவிக்கின்றார். மெய்யன்பர் மேற்கொள்ளும் விரதநெறியை, ஈண்டு “அன்பர் சார்ந்திடும் திருவிரதம்” எனக் கூறுகின்றார். விரதம் - கொள்கை. தீருமோ, ஓகாரம் எதிர்மறை.

     இதனால், ஞான நெறி விரத நெறி என்ற இரண்டாலன்றி வேறே எதனாலும் பிறவி வருத்தம் போகா தென்று விளம்பியவாறாம்.

     (1)