1265. வேத னேனும்வி லக்குதற் பாலனோ
நீத னேன்துயர் தீர்க்கும்வ யித்திய
நாத னேஉன்றன் நல்லருள் இல்லையேல்
நோதல் நேரும்வன் நோயில்சி றிதுமே.
உரை: தீதுடையேனாகிய எனது துன்பத்தைத் தீர்த்தருளும் வைத்திய நாதப் பெருமானே, உனது நல்ல திருவருளில்லையாயின், பிரமனேயாயினும் நோவைச் செய்யும் வன்மையான நோயிற் சிறிதளவைத் தானும் தீர்க்க வல்லவனாவனோ? ஆகான். எ.று.
நீதன் - தீதுடையவன்; நீசன் என்பது நீதன் என வழங்கிற்று. “நீதரல்லார் தொழும் மாமருகல்” (மருகல்) என ஞானசம்பந்தர் வழங்குவர். துயர் - பிறவித் துன்பங்களால் உண்டாகும் துயரம் இங்கே துயர் எனப்படுகிறது. நல்லருள் நல்லறமே செய்யும் திருவருள்; இதற்கு மறுதலை யில்லை யெனக் கொள்க. அறக்கருணை மறக்கருணை யென்பன வேறியல்பினவாகலின், அவற்றை நல்லருளோடு ஒப்ப வைத்தெண்ணல் பொருந்தாதென உணர்க. உயிர்கட்கு வேண்டும் உலகு உடல் கருவி முதலியவற்றைப் படைத்தளிக்க மாத்திர முரிமையுண்டன்றி, அவற்றுள் ஊனமுண்டாயினும் மாற்றும் வன்மையின்மையின், “வேதனேனும் விலக்குதற் பாலனோ” என வினவுகின்றார். நோதல் நேரும் வன்னோய் - நோவினைச் செய்யும் வன்மை மிக்க நோய். நேர்தல் - செய்தற்பொருளில் வந்தது. மருந்து மாயங்களால் போக்கக்கூடாத கொடிய நோய் இங்கே வன்னோய் என்று குறிக்கப்படுகிறது.
இதனால், எத்தகைய நோயையும் போக்க வல்லது திருவருளொன்றே யென்பது தெரிவித்தவாறாம். (2)
|