127. மாயை நெறியா முலக வாழ்க்கை தன்னில்
வருந்திநினை யழைத்தலறி மாழ்கா நின்றேன்
தாயை யறியாது வரும் சூலுண்டோ வென்
சாமிநீ யறியாயோ தயை யில்லாயோ
பேயை நிகர் பாவியென நினைந்து விட்டால்
பேதையே னென்செய்கேன் பெருஞ்சீர்க் குன்றே
சாயை கடல் செறி தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
உரை: கடற் காற்று வந்தணையும் தணிகை மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வே, பெரியசீர் படைத்த அருட் குன்றமே, மாயை நெறியே நிலவும் உலகியல் வாழ்க்கையில் உண்டாகும் துன்பங்களால் வருந்தி உன்னை நினைந்து பன்முறையும் கூவியழைத்து அழுதும் அலறியும் மயங்குகின்றேன்; தாயை யறியாத சூல் இல்லை என்பதற் கொப்ப, யானுறும் துன்பத்தைச் சாமியாகிய நீ அறியாமல் இல்லை; என் துயர் நீங்காமையால் உனக்கு என்னிடம் தயவு இல்லையோ என நினைக்கின்றேன்; பேய் போலும் பாவி யென்று திருவுள்ளத்தில் எண்ணி என்னை நீ கை விட்டால் பேதையாகிய யான் செய்யக் கூடியது யாது? உரைத்தருள்க, எ.று.
ாயை கடல் என்பதைக் கடற்சாயை என மாறுக. சாயை, ஈண்டுக் கடலினின்றும் வீசும் காற்றின் மேற்று. மாலைப் போதில் தணிகை மலைமேல் நின்று கிழக்கு நோக்கி நிற்பவர் கீழ்க் கடற்கரையிலிருந்து வரும் குளிர்ந்த உப்பங் காற்றை யுணர்வர். கடற்காற்றில் உலவிப் பயின்றவராதலால், தணிகை மலைக் காற்றில் கடற் காற்றின் சாயை கண்டு, “சாயைகடற் செறிதணிகை” என்று சிறப்பிக்கின்றார். பெருஞ்சீர் பெற்றது முருகன் திருவருளாலாதலால், குன்றென்றது, திருவருட்காயிற்று. உலகிற்கும் உலகியல் பொருள்கட்கும் முதற் காரணம் மாயையாதலால், உலகியல் வாழ்வை, “மாயை நெறியாம் உலக வாழ்க்கை” என்று கூறுகின்றார். மாயா காரியங்கள் நிற்பன போலத் தோன்றி நில்லாது கெடுவன வாதலால் அவற்றை நம்பி வாழ்பவர் குற்றம் புரிந்து துன்புறுவது இயல்பு; “மண்ணுளே திரியும் போது வருவன பலவும் குற்றம்” (நனிபள்ளி) எனத் திருநாவுக்கரசர் கூறுவர். “எண்ணமே யுடல்வாய் மூக்கொடு செவிகண் என்றிவை நின் கணே வைத்து” வாழ்தலே வேண்டப்படுவது; அவ்வாறு “மண்ணிலே அடியேன் வாழ்கிலேன்”; ஆகவே “வருக என்று அருள்புரிவாயே” (வாழாப்) என மணிவாசகப் பெருமானும் முறையிடுகின்றார்; அப்பெருமக்கள் வழித் தோன்றலாதலால் வள்ளற் பெருமானும், “உலக வாழ்க்கை தன்னில் வருந்தி நினை யழைத் தலறி மாழ்கா நின்றேன்” என்று விளம்புகின்றார். மாழ்குதல் - மயங்குதல். இது மாழாத்தல் எனவும் வருவதுண்டு. கருப்ப முற்றுத் தாய்மை யெய்தும் பெண்ணுக்குத் தான் கருப்ப முற்றிருப்பது பிறர் சொல்லாமே அறியப்படுவது; “தாய் அறியாத சூல் இல்லை” என்று பழமொழியும் இதுபற்றி எழுந்து நிலவுகிறது. எல்லாமாய் எங்குமாய் நிறைந்திருக்கும் இறைவனாகிய நீ என் நிலை யனைத்தும் அறிவாய் என்பாராய்ந், “தாயை யறியாது வரும் சூலுண்டோ, என் சாமி நீ அறியாயோ” என வுரைக்கின்றார். சூல் - கருப்பம். முருகனுக்குள்ள பெயர்களுள் சாமி என்பது ஒன்று. “சாமிதாதை” என்று சிவனைத் திருமுறைகள் கூறுவதுண்டு. பெறலரும் பொன்னையும் வடவர் சாமி என்பவாகலின், பொன் போல் அருமைப் பண்புடையாரைச் சாமி எனப் புகழ்வது பிற்கால மரபாயிற்று. “மீனே றுயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பின், தானேறனை யானுளன் சீவகசாமி என்பான்” (சீவக) எனத் திருத்தக்க தேவர் உரைப்பது காண்க. இல்லையென்பது உடைமைக்கும் உண்மைக்கும் பொதுவாய மறுதலைச் சொல். தயை என்பது உடைமையாயின், இல்லாதொழிவது பொருந்தும்; நீ தயைக்கு உறைவிடமாதலின் இல்லா தொழிதற்குக் காரணமின்மையின், நீ தயை யில்லாத வனன்றே என்பார், “தயை யில்லாயோ” என வினவுகின்றார். தயை நிரம்ப விருப்பினும் பேய்க்குச் செய்வதால் மக்கட்குத் துன்ப மிகுமாதலால், தயை செய்யாமை நன்று என்று நினைந்து வாளா இருக்கின்றாயோ? யான் பேய் போன்றவனே யன்றிப் பேயல்லேன்; ஆசை கொண்டலைவதில் பேயை ஒத்தவன்; அறிந்தும் அறியாமலும் தீவினை செய்து பாவியானவன்; பாவியாயினான் தன் பாவத்தை யெண்ணி மனம் தெளிந்து வருந்துமிடத்து அவன் நின் தயவைப் பெறுதற்குரியன்; பெறாவிடில் செய்வது தெரிதலின்றிப் பேதுற்றுக் கெடுவேன் என்பாராய்ப் “பேயை நிகர் பாவியென நினைந்து விட்டால் பேதையேன் என் செய்கேன்” என்று புலம்புகின்றார். செய்வேன் என்னாமல் செய்கேன் என்பதால், யான் என்ன செய்ய முடியும் என்று சொல்லுகிறாராம்.
இதனால், உலக வாழ்க்கை தரும் துன்பத்தால் வருந்தும் என்பால் தயைசெய்து நின் இன்னருளை நல்க வேண்டுமென இறைஞ்சியவாறாம். (25)
|