பக்கம் எண் :

1271.

     நீதி மாதவர் நெஞ்சிடை நின்றொளிர்
     சோதி யேமுத்தொ ழிலுடை மூவர்க்கும்
     ஆதி யேநின்அ ருள்ஒன்றும் இல்லையேல்
     வாதி யாநிற்கும் வன்பிணி யாவுமே.

உரை:

      நீதியையுடைய பெரிய தவஞானிகளின் நெஞ்சில் நின்று ஒளிவிடும் அருள் ஒளியே, படைத்தல் முதலிய தொழில் மூன்றையும் செய்யும் தேவர் மூவர்க்கும் ஆதியாகிய நினது அருள் இல்லையாயின் வலிய பிணி வகைகள் யாவும் வந்து பற்றி வருத்தும். எ.று.

     நீதியே தனக்கு வடிவாக வுடையவனாதலினாலும் தவயோக வடிவினனாதலினாலும், “நீதி மாதவர் நெஞ்சிடை நின்றொளிர் சோதி” என மொழிகின்றார். “நீதி பலவும் தன்னவுருவாமென மிகுத்தவன்” எனவும், “யோகத்தையே புரிந்தான்” (நல். பெரு) எனவும் ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் செய்யும் பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரையும், “முத்தொழிலுடை மூவர்” என்கின்றார். “மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே” (செம்பொன்) எனவும், “மூவரின் முதலாகிய மூர்த்தியை” (கடுவாய்) எனவும் திருநாவுக்கரசரும் கூறுதல் காண்க. இறைவன் திருவருள் இல்லையானால் உயிர்கள் வாழ்வில் இன்பமின்றி நோய்வாய்ப்பட்டுக் கிடந்து வருந்தும் என்பார், “நின் அருள் ஒன்றும் இல்லையேல் வாதியா நிற்கும் வன்பிணி யாவுமே” என்கின்றார்.

     இதனால், திருவருள் இன்றியமையாமை எதிர்மறை முகத்தால் வற்புறுத்தியவாறு.

     (8)