பக்கம் எண் :

1276.

     சென்றுசென்று நல்காத செல்வர்தலை வாயிலிலே
     நின்றுநின்று வாடுகின்ற நெஞ்சமே - இன்றுதிரு
     ஒற்றிஅப்பன் தாண்மலரை உன்னுதியேல் காதலித்து
     மற்றிசைப்ப தெல்லாம் வரும்.

உரை:

      பன்முறை சென்றாலும் கொடாத செல்வ மக்களின் மனைவாயிலில் நெடிது நின்று வாட்டமுறுகின்ற மனமே, இன்று திருவொற்றியூரில் எழுந்தருளும் அப்பனாகிய சிவனது திருவடித் தாமரையை அன்புற்று நினைப்பாயேல், வாழ்க்கைக்கு வேண்டுவன என நூலோர் சொல்லுவதெல்லாம், எய்தும். எ.று.

      சென்று சென்று என்ற அடுக்குப் பன்மை சுட்டி நின்றது. நல்காதார் மனைவாயிலிலே பன்முறையும் சென்றது நல்காமை யியல்பு அறியாமை என அறிக. செல்லுந் தோறும் நல்குவரென்ற நினைவால் நெடிது நின்று வாடினமை விளங்க “நின்று நின்று வாடுகின்ற நெஞ்சமே” என்று கூறுகின்றார். “உன்னுதியேல்” என்றது, செல்வர் மனைக்குச் சென்றது போல் பன்னாள் பன்முறை செல்ல வேண்டா. நெஞ்சால் நினைத்தாலே போதும் என்றவாறு, காதலித்து உன்னுதியேல் என இயைக்க. உலகில் அமைதி சான்ற வாழ்க்கைக்கு வேண்டுவன என நூலோர் கூறுவன, ஈண்டு “இசைப்பது” எனத் தொகுத்துக் காட்டப்படுகின்றன. நீ தேடிப் போக வேண்டா; அவை தாமே நின் மனையை நாடி எஞ்சாமல் வரும் என்பார், “எல்லாம் வரும்” என்பதாம்.

     இதனால், ஒற்றியப்பன் தாண் மலரை உன்னுவார் வேண்டுவன எல்லாம் பெறுவார் என்பதாம்.

     (3)