129. முந்தை வினையா னினது வழியிற் செல்லா
மூடனேன் றனையன்பர் முனிந்து பெற்ற
தந்தை வழி நில்லாத பாவி யென்றே
தள்ளிவிடின் றலைசாய்த்துத் தயங்குவேனே
எந்தை நினதருள் சற்றே அளித்தால் வேறோர்
எண்ணமிலேன் ஏகாந்தத் திருந்து வாழ்வேன்
சந்தன வான்பொழில் தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகசவாழ்வே.
உரை: சந்தன மரங்கள் வளரும் உயர்ந்த சோலைகளை யுடைய தணிகை மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வே, முன்பு செய்த வினைப் பயனால் யான் நீ அருளிய நல்வழியில் ஒழுகாத மூடனாகிய என்னை வெறுத்து, தந்தை சொல்லிய சொல்வழி நில்லாமல் ஓடிப் பாவமே செய்த பாவி என்று சொல்லி நினது அன்பு பெற்ற மெய்யன்பர்கள் புறம்பெனத் தள்ளி விடுவாராயின், வேறு செயல்வகை யின்றி நாணித் தலைகுனிந்து தயங்கி நிற்பேன்; எந்தையாகிய நின்னுடைய அருள் சிறிது கிடைக்கப் பெறுவேனாயின், வேறு ஒருவகை எண்ணமுமின்றித் தனித்திருந்து மகிழ்வுடன் வாழ்வேன், காண், எ. று.
வான்பொழில்- பெருமை மிக்க சோலை; வானளாவும் பொழில் என்றுமாம். மிக வுயர்ந்து பல் கிளைவிட்டுத் தழைத்துத் குளிர் நிழல் தந்து நறுமணம் கமழ்ந்து இன்பம் செய்வது பற்றிச் “சந்தன வான் பொழில்” என்று சிறப்பிக்கின்றார். இறைவன் சொன்ன அருள் நெறியில் நில்லாமல் பாவ வினை செய்து துன்புறுதற் கேது தமது மூடத் தன்மையென்றும் அதற்குக் காரணம் முன்னை வினையின் விளைவென்றும் எண்ணி யறிந்தமையின், “முந்தை வினையால் நினது வழியில் செல்லா மூடனேன்” என மொழிகின்றார். “வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்” என்று சிவஞான போதம் தெரிவிப்பது காண்க. நன்னெறி பற்றிப் பலர் நலம் பெற யான் வேறு நெறி நின்று துன்புறுதற்குக் காரணம் யாதாம் என்று எண்ணுவார்க்கு இவ்வுண்மை புலனாம் என்றாராயிற்று. இறைவன் வகுத்தது “பொய்தீர் ஒழுக்க நெறி” என்று திருவள்ளுவர் கூறுவ தறிக. வீணெறியிற் சென்று வினை செய்து துன்புறுவாரைக் காணும் நல்லோர், மக்கட்குரிய இயல்பில் வெறுப்பது, கண்ட மாத்திரையே யுளதாகும் கருத்தாதலால் அதனை நினைந்து, “மூடனேன்தனை அன்பர் முனிந்து” நோக்குவ ரென்றும், தந்தை வழி நில்லாத பாவி யென்றே சொல்லி இகழ்வ ரென்றும், தம்மொடு சேரக் கொள்ளாமல் தள்ளுவ ரென்பாராய்த், “தள்ளிவிடில்” என்றும் உரைக்கின்றார். செய்த குற்றம் காட்டி விலக்குமிடத்து வேறு பேச்சுக் கிடமில்லாமையால் நாணித் தலை குனிவதன்றிப் பிறிதோர் செயலின்மையால் “தலை சாய்த்துத் தயங்கு வேனே”, என்றும், தயங்குமிடத்துத் தள்ளுவோர், உள்ளத்தில் அருளும் அறிவில் தெளிவும் கொண்டு ஏற்பினும் ஏற்பர் என்பது கருத்தாதலால், “தயங்குவேனே” என்றும் கூறுகின்றார். நெறியிழந்து மூடனாகிய எனக்கு நின் திருவருள் சிறிது கிடைப்பின் மூடம் நீங்கி உலகியற்குரிய எண்ணம் ஒன்றுமின்றித் திருவருள் ஞானக் காட்சி கொண்டு தனித் திருந்து சிந்தையை நின் திருவடியிற் செலுத்தி உய்குவேன் என்பாராய், “எந்தை நினது அருள் சற்றே யளித்தால் வேறோர் எண்ணமிலேன் ஏகாந்தத் திருந்து வாழ்வேன்” என விண்ணப்பிக்கின்றார். ஒருமை யுள்ளுறத் தியான முற்றிருப்பது ஏகாந்தம் என அறிக.
இதனால், திருவருள் சிறிது கிடைப்பின், ஏகாந்த இன்ப வாழ்வு பெறுவேன் என முறையிடுமாறு காண்க. (27)
|