13. வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
வானை யொருமான் தாவுமோ
வலியுள்ள புலியை யோர் எலி சீறுமோ பெரிய
மலையை யோர் ஈச் சிறகினால்
துன்புற வசைக்குமோ வச்சிரத் தூணொரு
துரும்பினால் துண்டமாமோ
சூரியனை யிருள்வந்து சூழுமோ காற்றில் மழை
தோயுமோ இல்லையது போல்
அன்புடைய நின்னடியர் பொன்னடியை யுன்னுமவர்
அடிமலர் முடிக்கணிந் தோர்க்
கவலமுறுமோ காம வெகுளி யுறுமோ மனத்
தற்பமும் விகற்ப முறுமோ
தன்புகழ்செய் சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை: தன் புகழை நிறுவும் சென்னைக் கந்த கோட்டத்துள் விளங்கும் கோயில் இடங்கொண்ட கந்தப் பெருமானே, தண்ணிய முகத்துத் தூய மணிகளுட் சிறந்த சைவமணியாம் சண்முகத் தெய்வமாகிய மணியே, வலிய பெரிய நெருப்பை ஒரு புல்லிய புழு அணுகிப் பற்ற முடியுமா? வானகத்தை மண்ணகத்து வாழும் ஒரு மான் தாவி யடைய முடியுமோ? வலிமை மிக்க புலியை எலி யொன்று நேர் நின்று சீற முடியுமா? பெரிய தொரு மலைக்குத் துன்பமுறுமாறு ஓர் ஈ தனது சிறகினால் அசைக்க முடியுமா? வச்சிரத்தாலான தூண் ஒன்றினைச் சிறு துரும்பினால் தாக்கித் துண்டாக்க முடியுமா? சூரியனை இருள் போந்து சூழ்ந்து கொள்ள முடியுமா? மழைநீர் குளிர்ந்து கட்டியாய் உறைவது போல் காற்றை உறையச் செய்ய முடியுமா? ஒருகாலும் ஒன்றும் முடியாது; அதுபோல மெய்யன்பால் நினக்கு அடியராயினாருடைய அழகிய திருவடிகளைச் சிந்தித்துப் பரவுபவரை அவலமோ, காமமோ, வெகுளியோ அடைய முடியுமோ? அவர் மனத்தின்கண் சிறிதேனும் பிறதெய்வங்களையோ மக்களையோ மதித்து அடி பரவும் திரிபுணர்வு உண்டாகாதன்றோ? எ. று.
கற்றவரும் வணிகரும் தொழிலரும் பல்கிக் கல்வியும் செல்வமும் வளமும் பெருக்குதலால் நல்லரசின் தலைமை நிலையமாய்ப் புகழ் தோன்றி நிற்றல் பற்றித் “தன்புகழ் செய் சென்னை” என்று சிறப்பிக்கின்றார். வன்மையுடன் உயர்ந்து நின்றெரியும் நெருப்பை “வன்பெரு நெருப்பு” என்று குறிக்கின்றார். வெயிலின் வெம்மைக் காற்றாத என்பில்லாத சிறு புழு என்றற்குப் “புன் புழு” என்றும், தூரத்தேயே வெம்மை யாற்றாது இறந்து படும் என்பது புலப்பட, “புன் புழுப் பற்றுமோ” என்றும் உரைக்கின்றார். தாவுவது மானுக்கு இயல்பாயினும் வானகத்துக்குத் தாவிப் போதல் ஆகா தென்பதற்கு, “வானையொரு மான் தாவுமோ” எனக் கேட்கின்றார். எலி பலவாய்த் திரளினும் ஒரு நாகப் பாம்பு சீறின், சிதறியோடி விடும் என்பர் திருவள்ளுவர் முதலிய சான்றோர். புலியின் இடியேறு போலும் முழக்கம் கேட்பின் நாகம் ஆழ்ந்த அளைக்குள் இருப்பினும் அஞ்சி யவ்விடத்தே யொடுங்கு மாதலின், “புலியை ஓர் எலி சீறுமோ” என வினவுகின்றார். வாயு பகவான் காற்றை யெழுப்பி மலைச் சிகரத்தைத் தூளாக்கினான் எனப் புராணம் கூறுதலால் ஈயின் சிறகெழுப்பும் காற்றை ஈண்டு ஒப்புக்கு உரைக்கின்றார். அசைவு துன்பம் பயத்தல் பற்றித், “துன்புற அசைக்குமோ” என்று கூறுகின்றார். வயிரத் தூண் வயிர வாளால் துண்டு படுவதாகலின் வச்சிரத்தூண் துண்டாகுமோ என்பவர், “ஒரு துரும்பினால் துண்டமாமோ” என மாட்டாமை தோன்றக் கூறுகின்றார். ஒளி முன் இருள் நில்லா தென்பது கொண்டு “சூரியனை இருள் வந்து சூழுமோ” என வினவுகின்றார். வானத்தே குளிர் மிக்கவழி மழை நீர் உறைந்து பனிக்கட்டியாவது போல் காற்று உறைவதில்லையாதலால், “காற்றின் மழை தோயுமோ இல்லை” என்று இசைக்கின்றார். அடியாருள்ளத்தில் உடைமையாக இருப்பது பரமன் திருவடியாதலின், அவருடைய அடியைப் “பொன்னடி” என்றும், அதனை நினைப்பவர்களும் அடியாராதலால் அவர் சேவடிகளைத் தலையால் வணங்குபவரைப், “பொன்னடியை உன்னுமவர் அடிமலர் முடிக் கணிந்தோர்” என்றும் பரவுகின்றார். அடியவர்க் கடியராதலும், தொண்டர்க்குத் தொண்டராதலும் சிறந்த பதி புண்ணியம் எனத் திருநாவுக்கரசர் அருளுதலால் அவர்க்குப் பாவப்பயனாகிய அவலமும், அதற் கேதுவாகிய காம வெகுளிகளும் அடையா என்பது பற்றி, “அவல முறுமோ காமவெகுளி யுறுமோ” எனவும், காம முதலிய படர்தற்குரிய பற்றுக் கோடும் இடமுமாகும் மனம் புண்ணிய நினைவு நிறைந்து விகற்ப முறாத திண்மை யுறுதல் பற்றி, “மனது அற்பமும் விகற்ப முறுமோ” எனவும் இயம்புகின்றார்.
இதனால் முருகன் அடியார் அடி நினைந்து பரவுவோர் காம வெகுளி காரணமாக உண்டாகும் அவலமுறார் என்றாராயிற்று. (13)
|