பக்கம் எண் :

66. தனிமைக்கிரங்கல்

திருவொற்றியூர்

    அஃதாவது இருள் செய்யும் தாமத குண மிகுதிப் பாட்டால் திருவருளின் நீங்கித் தனித்த நிலைமையை எண்ணி வருந்துவது.

    இதன்கண் தாமத குணத்தின் செய்கையால் திருவருளை மறந்தமையும், அதனை எதிரதாக் காக்கும் திறமின்மையும், மலவிருட் சுமையும், இறைவன் தருட்காவலால் தாமத விருட்குள் அகப்படாது இனிதிருந்தமையும், தாமத குணத்தால் நிகழும் பிழை பொறுக்க வேண்டுமென்பதும், தாமத விருளின் நீங்கி இன்ப வாழ்வு பெறற்கு இறைவழிபாடு வேண்டு மென்பதும், காரண மறியாது வினைசெய் துழலும் திறமும், சிவஞான வேட்கையும், மனத்திண்மை யின்மையே நினைவதும் காமாதிகளால் தாக்கப்படும் திறமும் பிறவும் கூறப்படுகின்றன.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1300.

     ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த
          அயன்முன் ஆகிய ஐவரை அளித்து
     நீக்கம் இன்றிஎவ் விடத்தினும் நிறைந்த
          நித்த நீஎனும் நிச்சயம் அதனைத்
     தாக்க எண்ணியே தாமதப் பாவி
          தலைப்பட் டான்அவன் தனைஅகற் றுதற்கே
     ஊக்கம் உற்றநின் திருவருள் வேண்டும்
          ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

உரை:

      திருவொற்றியூரில் எழுந்தருளிய உத்தமனாகிய பரம்பொருளே, படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் செய்தற் பொருட்டுப் பிரமன் முதலிய ஐவகைத் தேவர்களையும் படைத்து, நீக்கமின்றி எல்லாவிடத்திலும் நிறைந்து விளங்குகின்ற நித்தப் பொருள் நீயேயென்னும் உண்மையை ஒழிக்கக் கருதித் தாமத குணமாகிய ஒரு பாவி என்னைப் பற்றி கொண்டானாகலின், அவனை என்னினின்றும் நீக்குதற்கு ஊக்குவதில் மிக்க உனது திருவருளை நல்க வேண்டுகிறேன். எ.று.

     மாயா காரிய தத்துவ எல்லையைக் கடந்த பரம்பொருளாகிய சிவபெருமானை 'உத்தமப் பொருள்' என உரைக்கின்றார். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என வரும் தொழில் ஐந்தற்கும் முறையே அயன், திருமால், உருத்திரன், சதாசிவன், மகேசுவரன் என ஐவருண்மை பற்றி, “ஆக்கலாதிய ஐந்தொழில் நடத்த அயன் முன்னாகிய ஐவரை யளித்து” என்று கூறுகிறார். “நவந்தரு பேதம்” என்பவற்றுள் அருவமாகிய சிவம், சத்தி, நாதம், விந்து என்ற அருவம் நான்குமொழிய உருவம் நான்கும் அருவுருவம் ஒன்றுமாகிய ஐந்தும் அயன் முதலாகிய ஐந்துமாமென சிவஞான சித்தி முதலிய நூல்கள் (சிவ. சித். சூ. 1 அதி.4) கூறுவதால் அறிக. சிவபரம் பொருளொன்றே தொழிலைந்தும் இனிது நடத்தற்கென ஐவரைத் தோற்றுவித்தளித்தும், எவ்விடத்தும் எப்பொருளிலும் நீக்கமற நிறைந்து எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய் நின்று நிலவும் உண்மையை வற்புறுத்தற்கு, “நீக்கமின்றி எவ்விடத்தினும் நிறைந்த நித்தம் நீ எனும் நிச்சயம்” என இயம்புகிறார். மூலப்பகுதியில் அவ்வியத்தமாய் இருந்து வியத்தமாய்ச் சுகதுக்க போகவுருவமாய் உயிரைப் பற்றுவன குணம் மூன்றுமாம்; அவை சத்துவம், இராசதம், தாமதம் என வரும்; அவற்றுள் தாமதம் மோக வடிவிற் படர்ந்து உயிரறிவை மறைத்து உண்மையை யுள்ளவாறு உணரவும், காணவும் மாட்டாமற் றடுத்தல் செய்யும் நிலைமையைப் புலப்படுத்துவாராய், வள்ளற் பெருமான், தாமத குணத்தைப் பாவியென உருவகம் செய்து, “அதனைத் தாக்க எண்ணியே தாமதப்பாவி தலைப்பட்டான்” எனவும், இருளாய் நின்று மறைக்கும் அதனை ஒளியாய்த் தோன்றி யொழிக்க வல்லது திருவருளாதலால், “அவன்தனை யகற்றுதற்கு ஊக்கமுற்ற நின் திருவருள் வேண்டும்” எனவும் முறையிடுகின்றார். சிவஞான வொளியாகிய திருவருள் விளங்குமிடத்து உயிர்க்குறுதுணையாகும் கருவி கரணங்கள் யாவும் சோம்பலும் துளக்கமும் இன்றித் தத்தம் அறிவு செயல்களை விரைந்து தெளிவுற ஆற்றுமாறு விளங்க, “ஊக்கம் உற்ற நின் திருவருள்” என்று சிறப்பிக்கின்றார்.

     இதனால், இறைவனது என்றும் எங்கும் நிறைந்த உண்மையைத் தாமத குண மேம்பாடு மறப்பிக்கும் திறம் கூறியவாறாம்.

     (1)