பக்கம் எண் :

1301.

     கணத்தில் என்னைவிட் டேகுகின் றவன்போல்
          காட்டு கின்றனன் மீட்டும்வந் தடுத்துப்
     பணத்தும் மண்ணினும் பாவைய ரிடத்தும்
          பரவ நெஞ்சினை விரவுகின் றனன்காண்
     குணத்தி னில்கொடுந் தாமதன் எனும்இக்
          கொடிய வஞ்சகன் ஒடியமெய்ப் போதம்
     உணர்த்து வார்இலை என்செய்கேன் எளியேன்
          ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

உரை:

      திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளுகிற உத்தமப் பொருளாகிய சிவபெருமானே, தாமதமென்னும் குணங்களிற் கொடியதாகிய குணம், கணப் பொழுதில் என்னை விட்டு நீங்குவது போல் தோன்றுகின்ற தெனினும், மீள மீள என்னை வந்து பற்றிப் பொன்னாகிய பணத்தின் மேலும், மண்ணாகிய நிலத்தின் மேலும், பெண்ணாகிய மங்கையர் மேலும் ஆசை சென்று பரவும்படி என் மனத்தை அவற்றிற் கலக்கச் செய்கிற தாதலால், வஞ்சனையுருவாகிய அக்கொடிய தாமத குணம் என்பாற் கெட்டொழியுமாறு எனக்கு மெய்யுணர்வு நல்குபவரில்லை; செய்த தொன்றும் தெரியாமல் தனித்திருந்து வருந்துகிறேன், காண். எ.று.

     நீரின்கண் எழுந்து விழும் அலைபோலக் குணங்கள் கணந்தோறும் தோன்றி மறையும் இயல்பினவாதலால், “கணத்தினில் எனைவிட் டேகுகின்றவன் போற் காட்டுகின்றனன்” எனவும், காற்றலைக்குந் தோறும் நீரில் எழுந்தடங்கும் அலைபோல மீளமீளக் குணங்களும் தோன்றலும் கெடுதலுமாக இருத்தல் பற்றி, “மீட்டும் வந்தடுத்து” எனவும் கூறுகின்றார். தாமத குணம் அலைத்தலால் தமக்குளதாகும் மன வேறுபாட்டை விளக்குவாராய், பொன் மண் பெண்ணென்ற முப்பொருள்களின்பாலும் ஆசைகள் தோன்றி நெஞ்சை வருத்துவது கூறலுற்று, “பணத்தும் மண்ணினும் பாவையரிடத்தும் பரவ நெஞ்சினை விரவுகின்றனன் காண்” என விளம்புகின்றார். பண வடிவில் யாவரிடத்தும் இருந்து மாறுதலால் பொன்னைப் பணமெனக் குறிக்கின்றார். மண்ணெனப் பொதுப்பட மொழியினும் பயன் விளைவிக்கும் நில வடிவில் காண்பார் நெஞ்சில் விருப்புண்டாக்குவது பற்றி நிலம் எனப் பொருள் கூறப்பட்டது. ஒப்பனையும் உருவும் திருவுமுடைய மகளிர் தோற்றம் ஆடவர் உள்ளத்தை யீர்த்து ஆசையைத் தோற்றுவித்தால், பெண்ணென்னாது, “பாவையரிடத்து” என வுரைக்கின்றார். அடக்கமும் அமைதியு முற்றிருப்பினும் இம்மூன்றும் தாமதகுண மிகுதிப்பாட்டால் மனத்தை இச்சை யுணர்வுகளால் அலைப்பது புலப்பட, “பரவ நெஞ்சினை விரவுகின்றனன் காண்” என விரித்துரைக்கின்றார். சுகம் துக்கமென்ற இரண்டினும் மோகத்தைச் செய்து அறிவை முற்ற மயக்குமாறு பற்றித், தாமத குணத்தை, “குணத்தினிற் கொடுந் தாமதன் எனும் இக்கொடிய வஞ்சகன்” எனக் குறிக் குறிக்கின்றார். மறைந்திருந்து எழுதலின் “வஞ்சகன்” என்கின்றார். ஒடிதல் - அழிதல். “ஒடியா இன்பத் தவருறை நாடு” (சிலப். 10 : கட்) என்றாற் போல, மெய்ப் போதம் - மெய்யுணர்வு. மெய்ம்மை யுணர்ந்தவழி மறதி தாக்காதாகலின், “மெய்ப்போதம் உணர்த்துவார் இலை” என உரைக்கின்றார். இவ்வாற்றல் தாமத வஞ்சகற்கு இலக்காய்ச் செயலறவு பட்டு வருந்துகிறேன் என்பார், “என்செய்கேன்” என்றும், எதிரதாக் காக்கும் வலியிலேன் என்பார், “எளியேன்” என்றும் இயம்புகின்றார்.

      இதனால், தாமத குணத்தின் கொடுமையை எடுத்தோதி எதிரதாக் காக்கும் வலியின்மை விளம்பியவாறாம்.

     (2)