பக்கம் எண் :

1302.

     இமைக்கும் அவ்வள வேனும்நெஞ் சொடுங்கி
          இருக்கக் கண்டிலேன் இழிவுகொள் மலத்தின்
     சுமைக்கு நொந்துநொந் தையவோ நாளும்
          துயர்கின் றேன்அயர் கின்றஎன் துயரைக்
     குமைக்கும் வண்ணம்நின் திருவருள் இன்னும்
          கூடப் பெற்றிலேன் கூறுவ தென்னே
     உமைக்கு நல்வரம் உதவிய தேவே
          ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

உரை:

      திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் உத்தமப் பொருளே, உமாதேவியார்க்கு நல்ல வரம் தந்தருளிய பெருமானே, இமைப் பொழுதேனும் எனது நெஞ்சம் ஒடுங்கியிருக்கக் காண்கின்றேனில்லை; இழிந்த மலப்பிணிப்பு நல்கும் குற்றச் சுமையால் மிகவும் நொந்து நாளும் மிக்க துயர முறுகின்றேன்; அதனால் அயர்கின்ற என் துயரத்தைப் பற்றறத்துடைத் தொழிக்குமாறு இன்னமும் நினது திருவருளைப் பெற்றேனில்லை; வேறே யான் யாது கூற வல்லேன்? எ.று.

                சிவத்தின் திருமேனியில் இடப்பாகத்தைப் பெற்றுப் பிரிவின்றி மாதொரு கூறனாமாறு செய்து கொண்டதினும் நல்வரம் இன்மையின், “உமைக்கு நல்வர முதவிய தேவே” என வியந்து கூறுகின்றார். ஒருபால் உயிரறிவுக்கு ஆளாகியும் ஒருபால் பொறி புலன்களுக்கு ஆளாகியும் இயங்கியவண்ண மிருத்தலின், “இமைக்கு மவ்வளவேனும் நெஞ்சு ஒடுங்கி இருக்கக் கண்டிலேன்” என எடுத்து மொழிகின்றார். அனாதியே பிணித்து உயிரறிவை மறைத்து மனமொழி மெய்களாற் குற்றமே புரிவிக்கும் கொடுமை பற்றி, மலத்தை “இழிவுகொள் மலம்” எனவும், அதனால் உயிர் குற்றமே மிகப் பெற்றுத் துன்பமுறுவது விளங்க, “மலத்தின் சுமைக்கு நொந்து நாளும் துயர்கின்றேன்” எனவும் இயம்புகின்றார். மலப்பிணிப்பு அறவே கெடுந்துணையும் இத் துன்பச் சுமை இருந்தே தீர்வதாகையால், “ஐயவோ நாளும் துயர்கின்றே” னென்று புலம்புகிறார். திருவருள் ஞானத்தாலன்றி மலத்தொடக்கு நீங்கற்கு வாயிலில்லையென நூலோர் உரைத்தலால், “அயர்கின்ற என் துயரைக் குமைக்கும் வண்ணம் நின் திருவருள் இன்னும் கூடப் பெற்றிலேன்” என்று கூறுகின்றார். திருவருள் ஞான விளக்கம் சிவத்தால் உளதாம் என்பதை, “உருகுதலைச் சென்ற உள்ளத்தும் அம்பலத்தும் ஒளியே பெருகுதலைச் சென்று நின்றோன்” (கோவை, 104) எனத் திருவாத வூரடிகள் உரைப்பது காண்க. இந்நிலையில் வேண்டுவது திருவருட் பேறாய் முடிதலின் “கூறுவது என்னே” என்று இசைக்கின்றார்.

     இதனால், குணக் குற்றத்துக் கேதுவாகிய மலம் விளைக்கும் குற்றச் சுமைக்கு வருந்துவது விளம்பியவாறாம்.

     (3)