1304. கோடி நாவினும் கூறிட அடங்காக்
கொடிய மாயையின் நெடியவாழ்க் கையினை
நாடி நெஞ்சம் நலிகின்றேன் உனையோர்
நாளும் எண்ணிலேன் நன்கடை வேனே
வாடி னேன்பிழை மனங்கொளல் அழியா
வாழ்வை ஏழையேன் வசஞ்செயல் வேண்டும்
ஊடி னாலும்மெய் அடியரை இகவா
ஒற்றி மேவிய உத்தமப் பொருளே.
உரை: ஊடியபோதும் மெய்யன்பராயின் அவர்பால் சிறிதும் துனி கொள்ளுதல் இல்லாத திருவொற்றியூரில் எழுந்தருளிய உத்தமப் பெருமானே, கோடிக்கணக்கான நாவினைக் கொண்டு சொன்னாலும் அடங்காமற் பெருகும் கொடிய மாயா வுலக, நீண்ட வாழ்க்கையை எண்ணி மனம் மெலிந்து வருந்துகின்றே னாதலால், உன்னை நாடோறும் நினையா தொழிந்தேன்; எனவே, நான் நலம் பெறுதற்கு வழி யுண்டோ? என் பிழைகளை எண்ணி யெண்ணி வாடுகிறேன்; அதனைத் திருவுள்ளத்திற் கொள்ளாமல் எனக்கு அழிவில்லாத இன்ப வாழ்வைத் தந்தருள வேண்டும். எ.று.
மெய்யன்பர்கள் மனத்தே ஊடலுற்று வெவ்விய சொற்களைச் சொன்னாலும் வெறுப்புக் கொள்ளாமல் மகிழ்ந்தேத்தும் சொற்களாகக் கொண்டு உவக்கும் பெருங் காதலுடையன் சிவபெருமா னென்றற்கு, “ஊடினாலும் மெய்யடியாரை இகவா உத்தமப் பொருளே” என உரைக்கின்றார். அன்பு நிலையினின்றும் நீங்காமை, ஈண்டு இகவாமை எனப்படுகிறது. “ஊடினும் இனிய கூறும் இன்னகை” (பதிற். 16) எனச் சான்றோர் கூறுவது காண்க. இறைவன்பால் மெய்யன்பராயினார் ஊடுவரோ வெனின், ஊடுவதும் உவப்பதும் அவர்கட் குறுதி பயக்கும் என்பர்; “ஊடுவ துன்னோ டுவப்பதும் உன்னை உணர்த்துவதுனக்கெனக் குறுதி” (வாழா) எனத் திருவாசகம் தெரிவிப்பது காண்க. தன்கண் வாழ்வார் அறிவை மயக்குவது பற்றி “கொடிய மாயை” என்றும், உலகம் மாயா காரியமாகலின், அதன்கண் நிலவும் வாழ்நாள் குறுகிய தாயினும் துன்ப மிகுதியால் நீடுவதுபோலத் தோன்றல் பற்றி, “நெடிய வாழ்க்கை” என்றும், அந்த வாழ்வை நயந்து மனநோய் மிக்கு வருந்துமாறு விளங்க, “நாடி நெஞ்சகம் நலிகின்றேன்” என்றும் இசைக்கின்றார். மாய வாழ்வின் கொடுமை மிகுதி தோன்றக் “கோடி நாவினும் கூறிட வடங்கா” என்று குறிக்கின்றார். “நெடிய வாழ்வை நாளும் எண்ணிலேன்” எனவும், இத்தகைய எனக்கு நல்லின்பப் பெருவாழ்வு எய்துதற்கேது வில்லாமை யறிகிறேன் என்றற்கு “நன்கு அடைவேனோ” எனவும், இக் குற்றத்துக்காக இப்பொழுது பெரிதும் வருந்துகிறேன் என்பார். “வாடினேன்” எனவும் இயம்புகின்றார். பொறுப்பது பேரறமாதலின் என் பிழையைப் பொறுத்து எளியேனுக்கு இறவாப் பேரின்ப வாழ்வருள் வேண்டுமென இறைஞ்சுவாராய், “பிழை மனங் கொளல்” என்றும், “அழியா வாழ்வை ஏழையேன் வசம் செயல் வேண்டும்” என்றும் இறைஞ்சுகின்றார்.
இதனால், பிழை பொறுத்து அழியா வாழ்வருள் வேண்டுமென விண்ணப்பித்தவாறாம். (5)
|