1316. நீலம் இட்டகண் மடவியர் மயக்கால்
நெஞ்சம் ஓர்வழி நான்ஒரு வழியாய்
ஞாலம் இட்டஇவ் வாழ்க்கையில் அடியேன்
நடுங்கி உள்ளகம் நலியும்என் தன்மை
ஆலம் இட்டருள் களத்தநீ அறிந்தும்
அருள்அ ளித்திலை ஆகமற் றிதனை
ஓலம் இட்டழு தரற்றிஎங் குரைப்பேன்
உனைஅ லால்எனை உடையவர் எவரே.
உரை: விடமுண்டருளிய திருக்கழுத்தை யுடையவனே, நீல மையிட்ட கண்களையுடைய இமைகளில் உறுவிக்கும் வேட்கை மயக்கத்தால், மனமொரு வழியும் நான் ஒருவழியுமாகச் செல்வதற் கமைந்த இந்த நிலவுலக வாழ்க்கையில் இடையிடையே யுண்டாகும் இடர்ப்பாடுகளால் உள்ளம் நடுங்கி வருந்தும் என் தன்மையை நீ நன்கறிந்து வைத்தும் திருவருளை நல்கிற்றிலையாதலால், ஓல மிட்டழுதும் அரற்றியும் முறையிடலா மெனின், எங்கே எப்பொழுது யார்க்கு முறையிடுவேன்? உன்னைத் தவிர என்னைப் பொருளாக மதித்து ஏற்கும் இயல்புடையவர் யாவர் உளர்? எ.று.
கரிய மையணிந்த கண்களை யுடைமையால் இளமங்கையரை “நீலமிட்ட கண்மடவியர்” என்று கூறுகிறார். தம்மைக் காணும் ஆடவர் மனங்களைப் பிணித்துக் காமமயல் வினைவிக்கும் மகளிர்க்குக் கண் சிறந்த கருவியாதலின், மை தீட்டும் கண்ணைச் சிறந் தெடுத்துரைக்கின்றார். “மை விழியார் மனையகல்” என ஒளவைப் பிராட்டியார் விதந்தோதுவதும் இக்கருத்தே பற்றியென அறியப்படும்; காம வேட்கையால் மயங்கித் தடுமாறும் மனம் அறிவு வழி நில்லாது பொறி புலன்களின் வழிச் சென்று ஐவேறு நெறியில் அலமருவது விளங்க, “மடவியர் மயக்கால் நெஞ்சம் ஓர் வழி நான் ஒருவழியாய் நடுங்கி” என வுரைக்கின்றார். “சென்ற விடத்தாற் செலவிடா தீதொரிஇ, நன்றின்பால் உய்ப்ப தறிவு” எனவும், காட்சியால் மயங்கும் திறத்தை, “அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என்நெஞ்சு” (குறள்) எனவும், சான்றோர் கூறிக் காட்டுவ தறிக. காம வேட்கை உடலுணர்ச்சியை மிகுவித்து அறிவை மெலிவித்தலால் நெஞ்சம் அம் மெலிவறிந்து அறிவைத் தன்னகப் படுத்தித் தன்வழிச் செல்லுமாறு இயக்கிக் கோடலைக் குறித்தற்கு “நெஞ்சம் ஓர்வழி நான் ஒருவழியாய்” என வோதுகின்றார். அற்றம் காக்கும் கருவியாதலால் ஓரொருகால் அறிவு தெளிவெய்தும் போது, செய்யும் குற்றமறிந்து நெஞ்சு நடுங்குதலுமுண்மையின், “அடியேன் உள்ளகம் நடுங்கி நலியும்” என்றும், மயங்குதலும் தெளிதலும் மீள மயங்குதலும், நள்ளிரவும் நண்பகலும் போல மண்ணக வாழ்வு அமைந்திருப்பதை யுரைப்பார், “ஞாலமிட்டவிவ் வாழ்க்கையில்” என்றும், இவ் வாழ்க்கையைத் தந்தருளிய பெருமானாதலால் நீ எனது நடுங்கி யலமரும் நிலையை நன்கறிவாய் என்பார், “என் தன்மை நீ அறிந்தும் அருள் அளித்திலை” என்றும் இயம்புகின்றார். அருள், தெளிவாகிய திருவருள் ஞானம், உயிரறிவைப் பேரச்சத்துக்குள்ளாக்கிய விடம் கடலில் எழுந்தபோது, அதனை யுண்டருளித் திருவருளின்ப வாழ்வைப் பண்டு அமரர்க் களித்தது போல எனக்கு அருள் ஞானம் நல்கா யாயினை யென்பார், “ஆலம் இட்டருள் களத்த” என வுரைக்கின்றார். காம விச்சைக்கு மெலிந்து அறிவால் மாட்டாதொழிந்த யான் அதுபற்றி வாய் திறந்து உரத்த குரலால் ஓலமிட்டு அழுது உரைத்துத் துயர் மிகுதி தணியலாம் எனின் எங்கே எவரிடம் செல்வேன் என்பார், “ஆகமற்று இதனை ஓலமிட்டு அழுதரற்றி எங்குரைப்பேன்” எனக் கூறுகின்றார்.
இதனால், காம விச்சையால் அறிவு மெலிந்து அலமரும் குற்ற மெடுத்துரைத்தவாறாம். (7)
|