1319. அடிய னேன்மிசை ஆண்டவ நினக்கோர்
அன்பி ருந்ததென் றகங்கரித் திருந்தேன்
கொடிய னேன்படும் இடர்முழு தறிந்தும்
கூலி யாளனைப் போல்எனை நினைத்தே
நெடிய இத்துணைப் போதும்ஓர் சிறிதும்
நெஞ்சி ரங்கிலை சஞ்சலத் தறிவும்
ஒடிய நின்றனன் என்செய்கேன் சிவனே
உனைஅ லால்எனை உடையவர் எவரே.
உரை: ஆண்டவனே, அடியவனாகிய என்பால் நினக்கன்பு உண்டென்று நினைந்து இதுவரை மனம் இறுமாந்திருந்தேன்; கொடியவனாகிய யான் எய்தும் துன்பங்கள் அனைத்தையும் நன்கறிந்தும். என்னை ஒரு கூலியாளை நோக்குவதுபோல எள்ளற் பார்வையோடு நோக்கிக் காலம் நெடிது தாழ்த்தும் திருவுளம் இரங்குகின்றாயில்லை; துன்ப மிகுதியால் அறிவும் முறிந்து கெட வருந்துகிறேன்; வேறு என் செய்வேன்; என்னைப் பொருளாக மதித்து ஆதரம் செய்தலுடையவர் உன்னையன்றி வேறே யாவர் உள்ளனர்? எ.று.
ஆண்டவன் - உறுதியாவன தந்து உதவியவன். உயிர் வாழ்வாங்கு வாழ்ந்து ஞானம் பெற்றுப் பேரின்ப வாழ்வு பெறல் வேண்டி, உலகு, உடல், கருவி, கரணம், போகமாகியவற்றைப் படைத்தளித் தருளியது பற்றி இறைவன், ஆண்டவன் எனப்படுகின்றான். ஆண்டதற்குரிய காரணத்தை யெண்ணும் போது உயிர்களின்பால் அவனுக்குள்ள அன்பே காரணம் என்பது இனிது பெறப்படுதலால், அதனை நினைந்தறிந்து இறுமாந்திருந்த நிலையை, “அடியனேன் மிசை ஆண்டவ நினக்கு ஓர் அன்பு இருந்ததென்று அகங்கரித் திருந்தேன்” என வுரைக்கின்றார். அடியவன் - இறைவன் அருட் குறியாகிய திருவடியை நெஞ்சினில் மறவாதிருப்பவன். அகங்கரித்தல் - ஈண்டு இறுமாந்திருத்தல். “சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங் கிறுமாந் திருப்பன் கொலோ” (அங்க) என்று திருநாவுக்கரசர் கூறுவது காண்க. கொடியனேன் - கொடுமை நினைவும் செயலும் உடையவன். கூலியாளனைக் கூறியது, அவன் கூலியை நோக்குவ தன்றிக் கூலி தருவோன்பால் அன்பு கொள்ளாதவாறுபோல உலக போகங்களை நோக்குவ தன்றி, அவற்றை நல்கும் இறைவன்பால் அன்பு கொள்ளாமை காட்டற் கென அறிக. இத்துணைக் காலமும் யான் உண்மை யன்பு கொள்ளாமையை நோக்கி, எனபாற் சிறிதும் இரக்கம் கொண்டிலை என்ற கருத்துப் புலப்பட, “நெடிய இத்துணைப் போதும் ஓர் சிறிதும் நெஞ்சு இரங்கிலை” என இயம்புகின்றார். சஞ்சலம் - துன்பம். நான் பட்ட துன்பம் தானும் எனக்கு அறிவு விளக்கம் நல்காமல், அதனை மாற்றித் துன்பத்தையே நினையச் செய்தமையின், அறிவும் திரிந்தது என்பாராய், “சஞ்சலத்தால் அறிவும் ஒடிய நின்றனன்” என உரைக்கின்றார். மேன்மேலும் வளர்ந் தோங்கி ஞானம் பழுத்தற்குரிய எனது அறிவும் ஒடிய நின்றனன்” எனவும், அதனை யெண்ணும் போது கையற வுற்றுச் செயலற் றொழிகின்றேன் என்பார், “என் செய்கேன் சிவனே” எனவும் தெரிவிக்கின்றார்.
இதனால், சஞ்சலத்தால் இயற்கை யறிவு திரிந்தமை முறையிடுகின்றார். (10)
|