1322. ஊட்டு கின்றனை உண்ணுகின் றனன்மேல்
உறக்கு கின்றனை உறங்குகின் றனன்பின்
காட்டு கின்றனை காணுகின் றனன்நீ
களிப்பிக் கின்றனை களிப்புறு கின்றேன்
ஆட்டு கின்றனை ஆடுகின் றனன்இவ்
அகில கோடியும் அவ்வகை யானால்
தீட்டும் அன்பருக் கன்பநின் தனது
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
உரை: நெஞ்சக் கிழியில் உருவெழுதி வழிபடும் மெய்யன்பர்க்கு அன்பனே, நீ உண்பிக்க உண்பன உண்கின்றேன்; உறங்குவிக்க உறங்குகின்றேன்; நீ காட்டுதலால் காண்பவற்றைக் காண்கின்றேன்; களிக்கச் செய்கிறாய்; யான் களிப்புறுகின்றேன்; நீ ஆட்ட ஆடுகின்றனன் அடியேன்; இவ்வாறே அளவிறந்த அண்டங்களும் அவற்றினுள் வாழும் அனைத்துயிருமாதலால், எல்லாம் நின் திருவுளப்படி ஆவதல்லது யான் செய்வதாக ஒன்றும் இல்லை, காண். எ.று.
அன்பர்களுக் கெளியனாய் அவர் தாம் தம்மைத் தமது மனக் கிழியில் உருவெழுதி வழிபடும் தனிமாண்புடைமை பற்றி, “தீட்டும் அன்பருக்கன்ப” எனச் சிவபரம் பொருளைச் சிறப்பிக்கின்றார். “உயிரா வணமிருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின் உருவெழுதி, உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால், உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்வீர்” (ஆரூர்) என நாவுக்கரசர் உரைப்பது காண்க. உண்ணுதற் குரிய கருவிகள் அமையினும் உண்டற்குரிய செயல் நலம் அருளாற்றலால் அமைவது பற்றி, “ஊட்டுகின்றனை உண்ணுகின்றனன்” எனவும், உடற் கருவிகள் மேலும் உழைத்தற் பொருட்டு ஓய்வு பெறுதற்கும், உணர்வுக் கருவிகள் தெளிவு பெறுதற்கும் திருவருள் அயர்ச்சி நோக்கி உறங்குவித்தலின், “மேல் உறங்குகின்றனை உறங்குகின்றனன்” எனவும், தெளிவு தோன்றிய பின், காண்பன இனிது காணச் செய்தலும், நல்லதன் நலன் கண்டு மகிழ்வித்தலும் அருளாணையின் வழி இயங்குதல் பற்றிக் “காட்டுகின்றனை காணுகின்றனன்” எனவும், “நீ களிப்பிக்கின்றனை களிப்புறுகின்றேன்” எனவும் கூறுகின்றார். இவ்வாறே, செய்வனவும் தவிர்வனவும் தேர்ந்து செய்விக்கப் படுதலின், “ஆட்டுகின்றனை ஆடுகின்றனன்” என்றும், பிண்டத்தில் நிகழ்வதே அண்டத்தில் நிகழ்வது என்னும் முறைமை பற்றி, அகில அண்டங்களிலும் உள்ளன இயலுகின்றன என்பார், “இவ்வகில கோடியும் அவ்வகையாம்” எனவும் இசைக்கின்றார்.
இதனால், அகில உலகங்களிலுமுள்ள அனைத்துப் பொருள்களும் இயலும் திறம் கூறி, அருளினது பேராற்றலை விளக்கியவாறாம். (3)
|