பக்கம் எண் :

1325.

     நாடுந் தாயினும் நல்லவன் நமது
          நாதன் என்றுனை நாடும்அப் பொழுதே
     வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை
          வைகற் போதெலாம் வாடுகின் றனன்காண்
     பாடுந் தொண்டர்கள் இடர்ப்படில் தரியாப்
          பண்பென் மட்டும்நின் பால்இலை போலும்
     தேடும் பத்தர்தம் உளத்தமர் வோய்நின்
          சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.

உரை:

      அன்பால் உன்னையடைதற்குத் தேடித்திரியும் பேரன்பர் உள்ளத்தில் எழுந்தருளும் பெருமானே, பெற்ற மக்களின் நலத்தையே நினைந்தொழுகும் தாயினும் நல்லவன் நம்முடைய நாயகனான சிவபெருமான் என்று எண்ணி, எண்ணும் மனம் குளிர்ந்து தளிர்க்கின்றேன்; மற்றை நாட்களில் காலமெல்லாம் வாடி வருந்துகிறேன்; பாடுகின்ற தொண்டர்கட்குத் துன்பமுண்டாகிறபோது அதனைக் காணப் பொறுக்காமல் வேண்டிய அருள் புரிந்த அந்தப் பண்பு இப்போது என்பொருட்டு நின்பால் இல்லைபோலத் தோன்றுகிறதே; எல்லாம் நினது திருவுளப் பாங்கின்படி யாவதன்றி யான் செய்யலாவது ஒன்றுமில்லை, காண். எ.று.

     நாடி யடைபவர்க்கு நலமருளும் பெருமானாதலால் அன்பர் அவனைத் தேடியடைவர் என்றும், அந்த நலம் தானும் குன்றாமைப் பொருட்டு அவர்கள் உள்ளமே யிடமாகக் கொள்வனென்றும் சான்றோர் உரைப்பது பற்றி, “தேடும் பத்தர்தம் உளத்தமர்வோய்” என்று உரைக்கின்றார். திருஞானசம்பந்தர், “தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானை” (பிரம) எனபது காண்க. தான் பெற்ற மக்கள் நலமே பெற வேண்டுமென நினைப்பது தாய்க்கு இயல்பாயினும், அவள் நினைவுகளில் தலையாயது உடல்நலமும் பின்னதே அறிவு நலமுமாக, இறைவன் தன்னை யன்பாற் பரவும் உயிர் வாழ்வாங்கு வாழ்ந்து ஞான நலம் பெற்றுப் பிறவாப் பெருநலம் எய்துதல் வேண்டுமென நினைந்தருளுவதுபற்றி, “நாடும் தாயினும் நல்லவன் நமது நாதன் என்று நாடுவன்” எனக் கூறுகின்றார். “தாயினும் நல்ல தலைவரென்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள், வாயினும் மனத்தும் மருவிநின்றகலா மாண்பினர்” (திருக்கோண) என்று ஞானசம்பந்தர் எடுத்தோதுவது காண்க. நினைக்கின்றார் நினைவின்கண் அமுதூறி யண்ணிக்கும் நீர்மையனாதலால், “நாடும் அப்பொழுதே வாடும் நெஞ்சம் தவிர்க்கின்றேன்” என மொழிகின்றார்; “எண்ணித் தம்மை நினைந்திருந்தேனுக்கு, அண்ணித்திட்ட டமுதூறும் என்னாவுக்கே” (வெண்ணி) என்று திருநாவுக்கரசர் ஒதுவதறிக. நினையாவிடத்து நெஞ்சம் வேறு நினைவுகளால் இருள் சூழ்ந்து கோடலின் “மற்றை வைகற்போதெலாம் வாடுகின்றனன் காண்” என வருந்துகின்றார். வைகல் - நாள். பாடுவதும் இறைவனை நெடும்போது நெஞ்சின்கண் இருத்தி நினைத்தற்கு இனிய வாய்ப்பளித்தலின், அவர்கள் பன்னாள் இருந்து பாடுதற் பொருட்டு அருள்வழங்கும் சிவனது உயர்பண்பை வெளிப்படுத்தற்கு, “பாடும் தொண்டர்கள் இடர்ப்படின் தரியாப் பண்பு” எனப் பகர்கின்றார். “பாடுவார்களும் எந்தை” (முகுகுன்று) என ஞானசம்பந்தரும், “பாடும் புலவர்க் கருளும் பொருளென்” (அஞ்சை) என வினாவாய்பாட்டிற் சுந்தரரும் உரைக்கின்றார். அங்ஙனமே அவர்கள் பாடியது கண்டு பாடிப் பரவுகின்றேனாகலின், எனக்கு அருளும் பண்பு இல்லாதொழிந்ததே என வருந்துவார், “தரியாப் பண்பு என்மட்டும் நின்பால் இல்லைபோலும்” எனவும், நின் திருவுளப்பாங்கு யாதோ என்பார், “நின் சித்தமன்றி யான் செய்வதொன்றிலையே” எனவும் ஏங்கியுரைக்கின்றார்.

     இதனால் பாடற்பணி புரிந்த பெருமக்கட்கு நல்லருள் புரிந்த பெருமானாகிய நீ, எனக்கருளாமைக்கு நின் திருவுள்ளம் யாதோ என வேண்டிக் கொண்டவாறாம்.

     (6)