1326. மருள்அ ளித்தெனை மயக்கிஇவ் உலகில்
வருத்து கின்றனை மற்றெனக் குன்றன்
அருள்அ ளிக்கிலை ஆயினும் நினக்கே
அடிமை யாக்கிலை ஆயினும் வேற்றுப்
பொருள்அ ளிக்கிலை ஆயினும் ஒருநின்
பொன்மு கத்தைஓர் போதுகண் டிடவே
தெருள்அ ளித்திடில் போதும்இங் குனது
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
உரை: உலக வாழ்வில் மருளும் பண்பினை யெனக்கு வழங்கி மயங்கச் செய்து வருந்தவும் செய்கின்றாய்; உனது திருவருளையளிக்க வில்லையாயினும் உனக்கே யென்னை யடிமை யாக்கலாம்; அதனையும் செய்தாயில்லை; வேறாய பொன்னும் பொருளுமாகியவற்றையும் நீ கொடுக்கவில்லை; கொடாதொழியினும், ஒப்பற்ற பொன்னிறம் பொலியும் திருமுகத்தை ஒருபாற் கண்டு மகிழ்ச்சிகொள்ள மனத்தின்கண் தெளிவு நிலை யருளுவாயாயின், அதுவே எனக்குப் போதுமானதாம்; எல்லாம் நின் திருவுளப்படியாவதன்றி யான் செய்யலாவது ஒன்றுமில்லை, காண். எ.று.
மலமாயைகளின் பிணிப்பால் மண்ணக வாழ்வு மருட்சி மிக்கதாகலின், மக்களுயிர் மிகவும் வருந்துவது தோன்ற, “மருள் அளித்தெனை மயக்கி யிவ்வுலகில் வருத்துகின்றனை” என வுரைக்கின்றார். ஆலால சுந்தரர் மண்ணில் மானிடமாய்ப் பிறக்க வேண்டிய ஆணைதோன்றிய போது, “கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கினான், செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன், மையல் மானுடமாய் மயங்கும்வழி, ஐயனே தடுத்தாண்டருள் செய்யென” (தொண்டர் பு.) எனச் சேக்கிழார் கூறுவதால், மண்ணக வாழ்வு மயக்குறுத்தல் காணலாம். மயக்காவழி உயிர்கள் மலவிருளின் நீங்கற்கு வாய்ப்பில்லையென ஞான நூல்கள் உரைப்பது அறிக. மருள் - மருட்சி; மயக்கமுமாம். வாழ்தல் வேண்டி மயக்கருளிய பெருமானாகிய நீ அதனின் உய்திபெறற்கு வேண்டும் அருள் ஞானம் வழங்குதல் வேண்டும்; அதனை அருளிற்றிலை யென்பார், “எனக்கு உன் அருள் அளிக்கிலை” எனக் கூறுகிறார். “தாவா நன்னலம் பெற நிறைந்த ஞானமே” (சிவப். 69) திருவருள் ஞானம் எனப் பெரியோர் உரைப்பது காண்க. திருவருள் ஞானப் பேற்றுக்குச் சிவவழிபாடும் சிவத்தொண்டும் சிறந்த வாயிலாதலால், தன்னைச் சிவற்கு அடிமையாக்குதல் வேண்டும்; அதனையும் செய்திலை யென்பார், “ஆயினும் நினக்கே அடிமை யாக்கிலை” எனத் தெரிவிக்கின்றார். ஏகாரம் - தேற்றம்; பிரிநிலையுமாம். அருள் வாழ்வுக்கு வேறாயது பொருள் வாழ்வாகலின், அதனைத் தானும் நல்கவில்லை என்றற்கு, “வேற்றுப் பொருள் அளிக்கிலை” எனவும், பொன்னளிக்கா விடினும் பொன்னிறம் பொலியும் திருமுகத்தையும் காணச் செய்திலை எனப் புலம்புவார், “ஒரு நின் பொன் முகத்தை ஓர்போது கண்டிடவே தெருள் அளித்திடில் இங்கு போதும்” என்கின்றார். திருமுகக் காட்சி பெறுதற்குங் கூடச் சிவஞானத் தெளிவு வேண்டுமென யாப்புறுத்தற்குத் தெருள் இன்றியமையாதென வற்புறுத்துகின்றார்.
இதனால், மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டுமென விண்ணப்பித்தவாறு. (7)
|