1328. தாயி னும்பெருந் தயவுடை யவன்நந்
தலைவன் என்று நான் தருக்கொடும் திரிந்தேன்
நாயி னும்கடை யேன்படும் இடரை
நாளும் கண்டனை நல்அருள் செய்யாய்
ஆயி னும்திரு முகங்கண்டு மகிழும்
அன்பர் தம்பணி ஆற்றிமற் றுடலம்
தேயி னும்மிக நன்றெனக் கருள்உன்
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
உரை: தாயினும் மிக்க அருளுடையவன் நமது தலைவன் என்று எண்ணிப் பெருமிதம் கொண்டு எங்கும் திரிந்தேன்; நாயினும் கீழ்ப்பட்டவனாய் யான் படுந் துன்பத்தை நீ நாடேறும் கண்டருளி நின்னுடைய நல்லருளைச் செய்யாயாயினும் உனது திருமுகத்தைக் கண்களாற் கண்டு இன்புறும் மெய்யன்பர்க்கு உரிய பணிகளைச் செய்து அதனால் உடம்பு என்பாய்த் தேய்ந்தொழியினும் அது மிக்க நலம் பயப்பதாம்; அதுவும் நின திருவுள்ளப்படி யாவதன்றி யான் செய்யலாவது ஒன்றுமில்லை. எ.று.
பால் நினைந்தூட்டும் தாயினும் பரிவுடையவன் என்பதுபற்றித் தாயினும் பெருந் தயவுடையவன் நம் தலைவனாகிய சிவபெருமான் எனத் தாம் இறுமாந்திருந்தமை புலப்பட, “தாயினும் பெருந் தயவுடையவன் நம் தலைவன் என்று நான் தருக்கொடும் திரிந்தேன்” எனவும், அடியார்களின் பெருமையையும் தமது நிலையையையும் நோக்கித் தம்மைக் கடைமைப் பட்டாராக நினைக்கின்றாராகலின், “நாயினும் கடையேன், எனவும் உரைக்கின்றார். தமக்கு அருள் வழங்காமையை யெண்ணி, “படும் இடரை நாளும் கண்டனை நல்லருள் செய்யாய்” என முறையிடுகின்றார். மெய்யன்பராயினார் இறைவன் திருவடி காறும் கண் குளிரக்கண்டு பணி செய்து இன்புறுவதை நினைந்து, தமக்கு அப்பெருநிலை எய்தாதாயினும் அம்மெய்யன்பர்க்கு, அடிப்பணி யேனும் செய்தல் வேண்டுமென விழைவார், “திருமுகம் கண்டு மகிழும் அன்பர்தம் பணியாற்றி” என்றும், அச்செயலால் தமது உடலம் எலும்பு தேயத்தேயினும் அது தமக்குப் பெரியதோர் நற்பேறாம் என்பார், “உடலம் தேயினும் மிக நன்று எனக்கு” என்றும், அப்பேறு எனக்கு வாய்ப்பதும் நினது திருவுளப் பாங்கின்படி யன்றி யில்லை யென்பார், “அருளும் உன் சித்தம் அன்றி யான் செய்வ தொன்றிலையே” என்றும் இயம்புகின்றார்.
இதனால், மெய் யடியார்க்குப் பணி வாய்ப்பும் நின் திருவருளாலன்றி எனக் குண்டாதற் கில்லை யெனத் தெரிவித்தவாறாம். (9)
|