பக்கம் எண் :

1329.

     வானும் வையமும் அளிக்கினும் உன்பால்
          மனம்வைத் தோங்குவர் வள்ளல்நின் அடியார்
     நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில்
          நாடி நின்னருள் நலம்பெற விழைதல்
     கூனும் ஓர்முடக் கண்ணிலி வானில்
          குலவும் ஒண்சுடர் குறித்திடல் போலும்
     தேனும் கைக்கும்நின் அருளுண்டேல் உண்டுன்
          சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.

உரை:

      வானுலகத்தையும் மண்ணுலகத்தையும் சேரக் கொடுக்கினும் நின்பால் மனத்தை வைத்து ஒன்றி யோங்கி நின்ற மெய்யன் பராவர் வள்ளலாகிய நின்னுடைய திருவடித் தொண்டர்கள்; அவ்வகை நானும் உலகியல் வாழ்வுக்குரிய ஒழுக்கம் மேற்கொண்டு நினது திருவருள் நலம்பெற விரும்புவது கூனனும் முடவனுமாகிய குருடன் வானத்தில் விளங்கும் ஞாயிறு முதலிய சுடர்ப் பொருளைக் காண முயல்வது போலாம்; இவ்வரிய செயலும், தேனும் சுவை குறைந்து கைக்கும் என்னுமாறு, பெருஞ் சுவையுற்ற நினது திருவருள் எய்துமாயின் எளிதிற் கைகூடும்; நின் திருவுள்ளப்படியே யாவுமாம்; யான் செய்யலாவது ஒன்றுமில்லை. எ.று.

     இறைவன் திருவடிக்கண் பெறலாகும் சிவபோகத்தை விரும்பும் சிவனடியார்கள் மண்ணும் விண்ணுமாகிய இருவகை வாழ்வையும் பொருளாக மதிப்பவ ரல்லாரதலின், “வானும் வையமும் அளிக்கினும் நின்பால் மனம் வைத்தோங்குவர் நின்னடியார்” என உரைக்கின்றார். “வானேயும் பெறில் வேண்டேன்; மண்ணாள்வான் மதித்துமிரேன்” (சதக) என மணிவாசகப் பெருமான் உரைப்பது காண்க. இவ்வாறு அடியார்களால் புறக்கணிக்கப்பட்ட மண்ணக வாழ்விலிருந்து கொண்டு விண்ணவரும் நண்ண முடியாத திருவருள் இன்ப வாழ்வு பெற விரும்புவது எய்தற் கரிய செயல் என்பார், “நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில் நாடி நின்னருள் நலம் பெற விழைதல், கூனும் ஓர் முடக் கண்ணிலி வானில் குலவும் ஒண்சுடர் குறித்திடல் போலும்” எனக் குறிக்கின்றார். கூனும் முடமுமுடைய குருடனைக் கூறியது, நெறியில் வழுவும் ஒழுக்கத்திற் குறைவும் நல்லறி வின்மையும் புலப்படுத்தற்கு. திருவருட்டுணை எய்திய வழி இவ்வரிய செயலும் கைவரப் பெறும் எளியதா மென்றற்குத் “தேனும் கைக்கும் நின் அருளுண்டேல் உண்டு” என்றும், இத்தகைய திருவருள் எய்துவதும் எய்தாமையும் நின் திருவருட் பாங்கின்படி ஆம் என்றற்கு, “உன் சித்தம் அன்றி யான் செய்வ தொன்றிலையே” என்றும் மொழிகின்றார்.

      இதனால், எய்தற்கரிய திருவருட் பேறும் இறைவன் திருவுளப் படியே பெறப்படும் என்பது அறிவித்தவாறாம்.

     (10)