பக்கம் எண் :

69. கழிபகற் கிரங்கல்

பொது

    அஃதாவது காலம் வீணே கழிவது நினைந்து வருந்துவது. இதன்கண், இறப்புத் துயரினை எண்ணி யிரங்கியும், அருட்பேறு பெறாவழி அடைதுயர் எண்ணியும், அருள்விழி நோக்கு அருளாமைக்கு அழிந்தும், வல்வினைத் தொடக்கறுத்து, புன்னெறி மாற்றி எனக்கு நன்னெறியருள்க என்றும், உலக மயக்கால் துயருறுவேற்கு நீயே ஆதரவு என்றும், என்னைப் புரப்பது திருவருட் கடன், கைவிடற்க என்றும் அடிகள் மனங்கனிய இரங்கி வேண்டுகின்றார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1330.

     ஆண்ட துண்டுநீ என்றனை அடியேன்
          ஆக்கை ஒன்றுமே அசைமடற் பனைபோல்
     நீண்ட துண்டுமற் றுன்னடிக் கன்பே
          நீண்ட தில்லைவல் நெறிசெலும் ஒழுக்கம்
     பூண்ட துண்டுநின் புனிதநல் ஒழுக்கே
          பூண்ட தில்லைஎன் புன்மையை நோக்கி
     ஈண்ட வந்தரு ளாய்எனில் அந்தோ
          என்செய் கேன்நர கிடைஇடும் போதே.

உரை:

      சிவபெருமானே, முன்பே நீ என்னை ஆண்டு கொண்டாய்; ஆளப்பட்ட அடியவனாகிய என்னுடைய உடம்பு மாத்திரம் காற்றில் அசைகின்ற மடலையுடைய பனைமரம்போல வளர்ந்தொழிந்ததே யன்றி, உன் திருவடிக்கண் அன்பு பெருகவில்லை; வல்வினை பெருக்கும் நெறிக்குரிய தீயொழுக்கம் மேற்கொண்டதுண்டே யன்றி, நின் திருவருட் பேற்றுக்குரிய தூய நல்லொழுக்கத்தைக் கைக்கொள்ளவில்லை; இத்தகைய என்னுடைய பொல்லாத் தன்மையை யெண்ணி நீயே மனமுவந்து அருள் புரியாய் என்றால், இறுதியில் நரகம் புகும்போது, ஐயோ, என் செய்குவேன். எ.று.

     தம்முடைய நினைவு முற்றும் எப்பொழுதும் சிவபெருமானையே பற்றிக் கொண்டிருப்பது கொண்டு தம்மை அப்பெருமான் ஆண்டு கொண்டானெனத் துணிந்தமையின், “நீ என்றனை ஆண்டதுண்டு” என்றும், ஆளப்பட்ட யான் உடல் வளர்ச்சி பெற்றிருக்கின்றேனே யன்றி, உள்ளத்தே நின்பால் உண்டாகிய அன்பு வளர்ச்சி பெற்றிலேன் என்பார், “அடியேன் ஆக்கை யொன்றுமே பனைபோல் நீண்ட துண்டு” என்றும், “உன்னடிக்கு அன்பு நீண்டதில்லை” என்றும் கூறுகின்றார். மடல் விரிந்த பனை காற்றில் நன்கு அசைவது பற்றி, “அசை மடற் பனை போல் நீண்டதுண்டு” எனக் குறிக்கின்றார். நீளுதல் - உயரமாக வளர்தல். அன்பு பெருகாமையை, “அன்பு நீண்டதில்லை” என்கின்றார். இந்த நெடிய வளர்ச்சியில், கழிந்த காலத்தில் என்பால் நீக்குதற்கு வலிதாகிய தீயொழுக்கம் தோன்றி யுளதாயிற்றே யன்றி நல்லொழுக்கம் அமையவில்லையே என வருந்துவார், “வன்னெறி செலும் ஒழுக்கம் பூண்டதுண்டு நின் புனித நல்லொழுக்கம் பூண்டதில்லை” என்று புகல்கின்றார். தோன்றிய பின் நீக்குதற் காகாமை புலப்படத் தீயாழுக்கத்தை “வன்னெறி செலும் ஒழுக்கம்” நீ என்றும் இறைவனுக்குரிய நன்னெறி யொழுக்கத்தைப் “புனித நல்லொழுக்கம்” என்றும் இசைக்கின்றார். பொய்ம்மைக் கிடமில்லாத தென்பதற்குப் புனித ஒழுக்கம் எனப்படுகிறது. திருவள்ளுவர், “பொய்தீர் ஒழுக்க நெறி” (கடவுள்) என்பது காண்க. நின்னால் ஆளப்பட்ட என்பால் அத்தகைய தீயொழுக்கம் தோன்றி உளதாதல் கூடாதாகலின், “என் புன்மையை நோக்கி ஈண்ட வந்தருளாய்” என வேண்டுகிறார். மெய்யன்பும் மெய்யொழுக்கம் நின்று நிலவித் திருவருட் செந்நெறிக்குச் சிறப்பு விளைவிக்க வேண்டுவது முறையாக அதனை விடுத்துப் பொய்ம்மையும் கீழ்மையும் பொருந்தத் தாழ்வு தோன்றியது பற்றி “என் புன்மையை நோக்கி” எனப் புகல்கின்றார். இப் புன்னெறியிலேயே வளர்ந்தொழிகுவேனாயின், முடிவில் நான் நரகம் புகுவதன்றி வேறில்லை; அந்நிலையில் யான் செய்யக்கடவது ஒன்றுமில்லை; என்னை இப்போதே விரைந்து போந்து ஆண்டருள்க, காலம் வீணே கழிகிறதென்பது விளங்க, “அருளாயெனில் அந்தோ நரகிடையிடும்போது என்செய்கேன்” என உரைக்கின்றார்.

     இதனால், நரகிற்குச் செலுத்தும் என் புன்னெறியை மாற்றி நன்னெறியில் நிறுத்தி யருள்க என முறையிட்டவாறாம்.

     (1)