பக்கம் எண் :

1333.

     அம்மை அப்பன்என் ஆருயிர்த் துணைவன்
          அரசன் தேசிகன் அன்புடைத் தேவன்
     இம்மை யிற்பயன் அம்மையிற் பயன்மற்
          றியாவு நீஎன எண்ணிநிற் கின்றேன்
     செம்மை யிற்பெறும் அன்பருள் ளகஞ்சேர்
          செல்வ மேஎனைச் சேர்த்தரு ளாயேல்
     எம்மை யிற்பெறு வேன்சிறு நாயேன்
          என்செய் கேன்நர கிடையிடும் போதே.

உரை:

      இறைவனே நீ, அம்மையும் அப்பனுமாயவன்; அரிய வுயிர்க்குத் துணைவன்; ஞான குருவும் அரசனுமாகியவன்; அன்புடன் வழிபடும் தெய்வமு மாயவன்; இம்மையிற் பெறலாகும் பயனும் அம்மையிற் பெறப்படும் பயனுமாகிய எல்லாப் பயனும் நீயே யாவாய் என எண்ணி, நினது அருளையே எதிர்நோக்கி இருக்கின்றேன்; செம்மை நெறியில் நின்று பெறுவன பெறும் மெய்யன்பர் திருவுள்ளத்தில் எழுந்தருளும் செல்வமே, என்னையும் உன் அருளடியார் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளாவிடில், சிறு நாயினும் கடையவனாகிய யான் வேறே எப் பிறப்பில் அதனைப் பெறுவேன்; முடிவில் நரகம் புகும்போது என்ன செய்வேன்? எ.று.

     உலகில் வாழும் மக்கட்கு உண்பொருளையும், உணர்வு நல்கும் பொறி புலன்கட் குரியவற்றையும், நோய்க்கு மருந்தாவனவற்றையும், ஞானம் பயப்பனவற்றையும், நீதியாவனவற்றையும் உரிய வகையிற் படைத்துதவுவதுபற்றி இறைவனை, “அம்மையப்பன், ஆருயிர்த் துணைவன், தேசிகன், அரசன்” எனப் படற்கொத்த இயல்புடையவனாக வுரைக்கின்றார். அன்பு செய்வார்க்கு ஆறுதல் நல்கும் உருவுடைத் தெய்வமாகவும் விளங்குவது கொண்டு, “அன்புடைத் தேவ” னெனக் கூறுகின்றார். இம்மையிற் சில பயன்களையும் மறுமை யம்மையிற் சில பயன்களையும் இறைவன் நல்குகின்றா னென்று சமய ஞானிகள் உரைப்பதால், “இம்மையிற் பயன் அம்மையிற் பயன் மற்று யாவும் நீயென எண்ணி நிற்கின்றேன்” என மொழிகின்றார். இம்மைக்கும் அம்மைக்கும் இடைப்பட்டது மறுமை. இம்மையில் நல்வினை செய்தார் மறுமையில் தேவருலகப் பயன்பெறுவரெனவும், அதனின் மேம்பட்டவர் தேவருலகுக்கும் மேலதாய்த் தன்னை யடைந்தார் பின்னர்ப் பிறவாப் பெருநிலைப் பயன் பெறுவ ரெனவும் நூல்கள் கூறுவ தறிக. இம்மையும் அம்மையும் கூறியதால் இடைநின்ற மறுமைப் பயன் வருவித்துக் கொள்ளப்பட்டது. இம்மை மறுமைகளில் செம்மை நெறி பிறழாமல் ஒழுகுபவர் தூயராய சான்றோ ரென்றும், அவர்களின் திருவுள்ளத்தை இறைவனாகக் கோயில் கொண்டிருந்து இன்புறுவன் எனப் பெரியோர் உரைத்தலால், “செம்மையிற் பெறும் அன்பருள் ளகஞ்சேர் செல்வமே” எனவும் சிறப்பிக்கின்றார். செந்நெறியிற் செலுத்துவது மெய்யன்பாதலால் “செம்மையிற் பெறும் அன்பர்” எனக் குறிப்பது நோக்குக. “அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் றைம்புலனும் அடக்கு ஞானம், புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர் கோயில்” (வீழிமிழ) என ஞானசம்பந்தர் எடுத்தோதுவது காண்க. இத்தகைய செந்நெறியாளர் கூட்டத்தில் எளியனாகிய என்னைச் சேர்த்து விடுக; இம்மையில் சேர்க்காவிடில் எப்பிறப்பிற்றான் நான் அதனை எய்த முடியும்? இதன் முடிவு தானே என்னை நரகிற்கு கொண்டு செல்வது என்பாராய், “எனைச் சேர்த் தருளாயேல், எம்மையிற் பெறுவேன் சிறு நாயேன்” எனவும், “என்செய்கேன் நரகிடை யிடும்போது” எனவும் இசைக்கின்றார்.

     இதனால், மெய்யடியார் கூட்டத்திற் சேர்ந்தருள்க என வேண்டிக் கொண்டவாறாம்.

     (4)