பக்கம் எண் :

1336.

     உண்ணு கின்றதும் உறங்குகின் றதும்மேல்
          உடுத்து கின்றதும் உலவுகின் றதும்மால்
     நண்ணு கின்றதும் நங்கையர் வாழ்க்கை
          நாடு கின்றதும் நவையுடைத் தொழில்கள்
     பண்ணு கின்றதும் ஆனபின் உடலைப்
          பாடை மேலுறப் படுத்துகின் றதும்என்
     றெண்ணு கின்றதோ றுளம்பதைக் கின்றேன்
          என்செய் கேன்நர கிடைஇடும் போதே.

உரை:

      உண்பதும் உறங்குவதும் மேலே உடுப்பதும் வீதிகளில் உலாவுவதும் அறிவு மயங்குவதும் மகளிர் தொடர்பை நாடுவதும் குற்றமான செயல்களைச் செய்வதும் இறந்தபின் உடம்பைப் பாடையிற் கிடத்துவதும் என இவ்வாறு நடப்பனவற்றை எண்ணும்போது என் மனம் பதைக்கின்றேனாதலால், நாளை நரகம் புகும்போது என்ன செய்குவேன்! எ.று.

     உண்ணுதல் முதலிய மூன்றும் எல்லார்க்கும் பொதுவாயினும், உலவுதல் செல்வர்க்கே அமைவதாகலின், ஏனையோர்க்கு உழைப்பது செயலாகக் கொள்க. மால் - மயக்கம். முக்குண வியக்கத்தால் மயக்கம் எல்லார்க்கும் பொருந்தும் என்க. மகளிரொடு கூடும் திறம் மிக்க இளையார்க்கும் மிக முதுமை யுற்றோர்க்கும் இல்லை என்று கொள்க. நவை - குற்றம்; நவையுடைய கள்ளும் புலையும் சூதும் பிறவும் பயிற்சியுற்ற யாவர்க்கும் பொதுவாம். இறந்தபின் உடம்பைப் பாடைமேல் கிடத்திச் செல்வது, உயர்ந்தோர் தாழ்ந்தோர், ஆடவர் பெண்டிர், இளையவர் முதியரென வேறுபாடின்றி யாவருக்கும் பொதுவாய் இயல்வது. உயிரோடிருக்கும்போது காணப்படும் உயர்வும் வேற்றுமையும் சிறப்பும் அது நீங்கியபின் கெட்டுச் சமநிலை யெய்துவது காண்பார்க்குத் துயரமிகுதியால் மனம் துடிப்பது இயற்கையாதலால், “எண்ணுகின்ற தோறு உளம் பதைக்கின்றேன்” என வருந்துகின்றார். இறப்பைத் தவிர்த்தற்கு வழி யேதுமின்மை தோன்ற, “என்செய்கேன் நரகிடையிடும்போது” என அவலிக்கின்றார்.

     இதனால், எத்திறத்தாரும் இறந்துபட்டுப் பாடை யேறும் துன்ப நிலை யெண்ணி வருந்தியவாறாம்.

     (7)