1339. அரக்கன் அல்லன்யான் அர்க்கனே எனினும்
அரக்க னுக்கும்முன் அருள்அளித் தனையே
புரக்க என்னைநின் அருட்கடன் என்றே
போற்று கின்றனன் புலையரிற் புலையேன்
உரக்க இங்கிழைத் திடும்பிழை எல்லாம்
உன்னல் ஐயநீ உன்னிஎன் அளவில்
இரக்கம் நின்திரு உளத்திலை யானால்
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
உரை: ஐயனே, யான் அரக்கனல்லன்; மானிடன்; அரக்கப் பண்புடைய னெனப்படின், அரக்கனாகிய இராவணனுக்கும் முன்பு அருள் செய்தாயாதலால், என்னைக் காத்தற் பொருட்டு நினது திருவருளைச் செய்வது நினது கடனாம்; அதுபற்றியே இப்போதும் உன்னைப் போற்றுகின்றேன்; புலைத்தன்மை யுடைமையால் இயற்கைப் புலையரினும் பொல்லாதவனாயினும், பேரிரைச்சலிட்டு உன்னை யழைக்கும் என் தவறுகளைப் பொருளாக மனத்தில் கொள்ளல் வேண்டா; கொள்வாயாயின், என்னளவில் உனக்கு இரக்கம் இல்லையாய் விடுமென அஞ்சுகிறேன்: நாளை நரகம் புக வேண்டிவரின் என் செய்குவேன்! எ.று.
அரக்கன் - இரக்கப் பண்பில்லாதவன். “இரக்க மென்றொரு பொருள் இலாத நெஞ்சினர் அரக்கர்” (கம்ப. தாடகை); ஈண்டு இஃது இராவணன் மேற்று, “பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப் பரிந்தவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம தத்துவனை” (தலையாலங்) என நாவுக்கரசர் ஓதுவர். தம்பால் அவ்வரக்கப் பண்பு இல்லையென மறுத்தற்கு “யான் அரக்கன் அல்லன்” என உரைக்கின்றார். இராவணனது பத்திநலம் கண்டு அருள்கூர்ந்த இறைவன், நீண்ட வாணாளும், ஒள்ளிய வாட் படையும் அளித்தான் என வரலாறு கூறுதலின், “அரக்கனே யெனினும் அரக்கனுக்கும் முன் அருள் அளித்தனையே” என உரைக்கின்றார். ஞானசம்பந்தர் இதனை நினைவு கூர்ந்து, “எண்ணின்றி முக்கோடி வாழ்நாளது உடையான்” (புள்ளிருக்கு) என உரைக்கின்றார். என்னைக் காப்பது நின் திருவருளுக்குக் கடமையாம் என வேண்டுவார், “என்னைப் புரக்க நின் அருட் கடன் என்று போற்றுகின்றனன்” என முறையிடுகின்றார். புரத்தல் என்பது புரக்க என வந்தது, வரல் வேண்டும் என்பது வரவேண்டும் என வருவது போல்வதொரு பிற்கால வழக்கு. புலையென்பது ஈண்டுப் புலால் உண்ணும் செயன்மேல் நின்றது. புலால் உண்போரைப் புலையர் என்ப; 'பொல்லாப் புலாலை யுண்ணும் புலையர்' (திருமந். 199) என்று திருமூலர் கூறுகிறார். புலையன் - புலைத்தன்மையுடையவன். உரக்க அழைத்தல் - பேரிரைச்ச லிட்டழைத்தல். பெரியோர் திருமுன் பேரிரைச்சலிட் டழைப்பதும் பேசுவதும் பிழையெனக் கருதப்படுவ துண்மையின், “உரக்க இங்கழைத்திடும் பிழை எல்லாம் உன்னல் ஐய” என வேண்டிக் கொள்கின்றார். உன்னல் - மனத்திற் கொள்ளுதல், ஈண்டு உன்னல் என்பது, மனத்திற் கொள்ளல் வேண்டா என அல்லீற்று எதிர்மறை வியங்கோட் பொருளில் வந்தது. நெஞ்சில் நினைத்துச் சினமுற்று அருளா தொழிகுவையேல் நான் நரகத்திற் கிடந்து இடர்ப்படுவேன் என்று வருந்துவாராய், “உன்னி என் அளவில் இரக்கம் நின் திருவுள்ளத் திலையானால் என்செய்கேன் நரகிடையிடும் போதே” என்று முறையிடுகின்றார்.
இதனால், என்னைப் புரப்பது திருவருட் கடன் என முறையிட்டவாறாம். (10)
|