70. தரிசனப் பதிகம்*
கோயில்
அஃதாவது, தில்லைப் பொன்னம்பலத்தின் நடுவே நின்று சிவபிரான் திருக்கூத்தியற்றும் இனிய
காட்சியைக் கண்டு இன்புறுந்திறங்களைப் பாடுவது. காண்பது வட மொழியில் தரிசனம் எனப்படும்.
இதன்கண், சிவமூர்த்தியின் சிரித்த முகங்கண்டு இருவாதனை யற்றமையும், அப்பிரானது
திருவடிக்காட்சி நலத்தை அருகிருந்து காணும் ஆர்வ மிகுவதையும், கச்சணி நடனம் காணுறும்
வேட்கையையும், ஆடல் காண எழுந்த ஆசைப்பெருக்கினையும், செம்மேனி யம்மானின் நிறப்பொலிவு
கண்டு சிந்தை வியந்தமையையும், வினை பிரிப்பினும் இவை காணப் பிரியாப் பேராசை யெழுவதையும்,
வள்ளற்பிரான் உளங்கனிவிக்க வல்ல பாவால் வடித்து, ஆடற் பிரானின் அழகியலில்
ஆர்வமீதூர்ந்து எடுத்தோதலைக் காணலாம்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 1340. திருவார் பொன்னம் பலநடுவே
தெள்ளார் அமுதத் திரள்அனைய
உருவார் அறிவா னந்தநடம்
உடையார் அடியார்க் குவகைநிலை
தருவார் அவர்தம் திருமுகத்தே
ததும்பும் இளவெண் நகைகண்டேன்
இருவா தனைஅற் றந்தோநான்
இன்னும் ஒருகால் காண்பேனோ.
உரை: திருவிளங்குகின்ற பொன்னம்பலத்தின் நடுவில் அமுதத் திரட்சி போன்ற உருவையும், ஞானவின்பத் திருக்கூத்தையு முடைய பெருமானாரும், தன்னடியார்க்கு இன்பநிலை யருளுபவருமான கூத்தப் பெருமானுடைய திருமுகத்தில் தோன்றுகிற இளமுறுவல் நகையைக் கண்டு மகிழ்ந்தேன்; அம்முறுவற் சிரிப்பை யான் எனது என்ற இருவகை வாதனையையும் துடைத்துவிட்டு இன்னும் ஒருமுறை கண்டு உய்வேனோ? எ.று.
சிவபோகத்தை நல்கும் சிறப்புடைய தென்றற்குப் பொன்னம்பலத்தைத் “திருவார் பொன்னம்பலம்” என்று புகழ்கின்றார். கூத்தப்பிரானுடைய திருவுருவ முற்றும் காண்பார்க்குத் தெளிந்த ஞானாமிர்தமாய்த் தோன்றுமாறு விளங்க, “தெள்ளாரமுதத் திரளனைய உருவார்” எனவும், திருக்கூத்து ஞான நடனம் எனப்படுவது பற்றி, “அறிவானந்த நட முடையார்” எனவும் பராவுகின்றார். தன்னைக் கண்டு பரவும் அடியவர்க்குப் பேரின்ப வருணிலையை நல்குவது விளங்க, “அடியார்க்கு உவகை நிலை தருவார்” என்று புகழ்கின்றார். கூத்தப் பெருமான் திருமுகத்தின்கண் தவழும் புன்முறுவல் வள்ளலார் மனத்தைப் பெரிதும் கவர்ந்து கொண்டமையின், அவர்தம் திருமுகத்தே ததும்பும் “இள வெண்ணகை கண்டேன்” எனவும், அதனால் தாம் பெற்ற நலம் கூறுவாராய், தம் உயிரைப் பற்றி வருத்தும் இருவகைப் பற்றும் அற்றொழிந்தன என்பார், “இருவாதனை யற்று” எனவும், மேலும் காண்டற்கியலா தொழிந்தமைக்கு வருந்துவாராய், “அந்தோ இன்னும் ஒருகாற் காண்பேனோ” எனவும் சொல்லி ஏங்குகின்றார். “தில்லைச் சிற்றம்பலவன் சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே” (திருவிருத்தம்) என நாவுக்கரசர் நவில்வது காண்க. இருவாதனை - இருவகைப் பற்று.
இதனால், கூத்தப் பெருமான் சிரித்த முகம் கண்டு இருவாதனையற்றமை கூறியவாறாம். (1)
|