பக்கம் எண் :

1342.

     தாயிற் பெரிய கருணையினார்
          தலைமா லையினார் தாழ்சடையார்
     வாயிற் கினிய புகழுடைய
          வள்ளல் அவர்தந் திருஅழகைக்
     கோயிற் கருகே சென்றுமனம்
          குளிரக் கண்டேன் பிரிவுற்றேன்
     ஈயிற் சிறியேன் அவர்அழகை
          இன்னும் ஒருகால் காண்பேனோ.

உரை:

      தாயினும் மிக்க அன்புடையவரும், தலைமாலை யணிந்தவரும், நீண்டு தாழ்ந்த சடையை யுடையவரும், வாயாற் சொல்லுதற்கு இன்பம் பயக்கும் புகழ்படைத்த வள்ளலுமாகிய கூத்தப்பெருமானுடைய திருவழகை அவரது திருக்கோயிற்கு அருகிற் சென்றதுமே மனம் குளிரக் கண்டேனாயினும், ஈயினும் சிறுமையுடைய எனக்கு ஆசை யாராமையால் அவரது அழகை இன்னும் ஒருமுறை காண்பேனோ என்ற ஏக்கம் பெருகுகின்றது. எ.று.

     அன்புக்குப் பேரளவையாவது தாயன்பாகலின், சிவத்தின் அன்பு நிறைவை, “தாயிற் பெரிய கருணையினார்” என்று எடுத்தோதுகின்றார். தலைமாலை யணிவது அவர்க்குத் தனிச் சிறப்பாதலால் “தலைமாலையினார்” எனவும், பின்னே நீண்டு தாழ்ந்தசைவது விளங்கத் “தாழ்சடையார்” எனவும் கூறுகிறார். பெருமான் புகழ்களைப் பேசுந்தோறும் இன்பம் ஊற்றெடுத்துப் பெருகுமாறு புலப்பட, “வாயிற் கினிய புகழுடைய வள்ளல்” என வாழ்த்துகிறார். திருக்கோயில் என்றது, பொன்னம்பலத்திற் சன்னிதியை. அண்மையிற் குறுகிக் காண்பதிலும் அருகிற் சென்று காண்பது திருவுருவை அழகுறுத்திக் காட்டுவ துணர்ந்து “அருகிற் சென்று மனம் குளிரக் கண்டேன்” என மொழிகின்றார். அருகாவது, அகலாமலும் அணுகாமலும் நிற்கும் இடம். கண்டவிடத்துப் பெருமானது பெருமையும் தமது சிறுமையும் மலையும் ஈயும் போலத் தோன்றினமை பற்றி, “ஈயிற் சிறியேன்” என வுரைத்து, ஆராமை மிகுதியால், “அவர் அழகை இன்னும் ஒருகாற் காண்பேனோ” எனப் புகல்கின்றார். தம்போற் பிறரும் அருகிருந்து கண்டு மகிழ்தற் பொருட்டு நீங்கினமையின் “பிரிவுற்றேன்” என்கின்றார்.

     இதனால், கூத்தப்பிரான் அழகை அருகிருந்து கண்டு மகிழ்ந்தது தெரிவித்தவாறாம்.

     (3)