1345. இம்மா நிலத்தில் சிவபதமீ
தென்னும் பொன்னம் பலநடுவே
அம்மால் அறியா அடிகள்அடி
அசைய நடஞ்செய் வதுகண்டேன்
எம்மால் அறியப் படுவதல
என்என் றுரைப்பேன் ஏழையன்யான்
எம்மான் அவர்தந் திருநடத்தை
இன்னும் ஒருகால் காண்பேனோ.
உரை: இந்தப் பெரிய நிலவுலகத்தில் இதுவே சிவபதம் என்று புகழ்ந்து ஓதப்படும் பொன்னம்பலத்தின்கண், அத் திருமால் கண்டறியாத திருவடியால் அசைந்து திருக்கூத்தாடுவது கண்டேன்; அதன் பொருள் நுட்பம் நம்மனோரால் உணரப்படுவ தன்று; அறிவறியா ஏழையாதலால் அக்கூத்தின் நலத்தை யான் என்னென் றுரைப்பேன்; எங்கள் பெருமானாகிய அவரது திருக்கூத்தை இன்னும் ஒரு முறை காணப் பெறுவேனோ? எ.று.
தில்லைப் பொன்னம்பலத்திற்குள்ள சிற்ப்பினை எடுத்துரைப்பாராய், “இம்மா நிலத்திற் சிவபதம் ஈது என்னும் பொன்னம்பலம்” என்று புகழ்கின்றார். சிவபெருமானுடைய திருவடிப் பெருமை விளக்குதற்கு, “அம்மால் அறியாதடிகள் அடியசைய” எனக் கூறுகின்றார். மாணிக்க வாசகரும், “அம்மால் திணிநிலம் பிளந்தும் காணாச் சேவடி” (அச்சப்) என வுரைக்கின்றார். ஒரு காலை யூன்றியும் ஒருகாலைத் தூக்கியும் அசைந்தாடியது தோன்ற “அடியசைய நடம் செய்வது கண்டேன்” எனவும், அந்த நடனத்தின் கருத்தென்னை யென்பார்க்கு விடை கூறலாகாமை புலப்பட, “எம்மாலறியப் படுவதல” எனவும், அறியாமைக்குக் காரணம் அறியும் அறிவில்லாத ஏழைமை எனற்கு, “என்னென்றுரைப்பேன் ஏழையன் யான்” எனவும் இயம்புகிறார். நடனத்தின் பொருள் தெரியாவிடினும் காண்பதில் உளதாகிய ஆசை பெரிது என்பார், “எம்மான் அவர்தம் திருநடத்தை இன்னும் ஒருகாற் காண்பேனோ” என்கின்றார். எம்மான் - எமக்குத் தலைவன். “மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க, நெய்ஞ் ஞின்றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான், கைஞ்ஞின்ற ஆடல் கண்டாற் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே” (திருவிருத்) என்பர் நாவுக்கரசர்.
இதனால், நடம் காண்டற்குள்ள ஆசைப் பெருக்கை எடுத்துரைத்தவாறாம். (16)
|