1347. அருளே வடிவாய் அம்பலத்தே
ஆடும் பெருமான் அடிகள்தமைத்
தெருளே வடிவாம் அடியவர்போல்
சிறியேன் கண்டேன் சீர்உற்றேன்
மருளே வடிவேன் ஆதலினால்
மறந்தே பிரிந்தே மதிகெட்டேன்
இருளேர் மனத்தேன் அவர்தமைநான்
இன்னும் ஒருகால் காண்பேனோ.
உரை: திருவருளே உருவாகக் கொண்டு அம்பலத்தில் ஆடும் பெருமானாகிய கூத்தப் பெருமான் அடிகளைத் தெளிந்த ஞானமே உருவாய் நிறைந்த மெய்யடியார்போல் சிறுமையுடைய யானும் கண்டு சிறப்படைந்தேன்; மருட்சியே எனது உருவாதலால், திரு நடக் காட்சிச் சிறப்பை மறந்து பிரிந்து நீங்கி அருளறிவு சிதைந்து கெட்டேன்; இருள் படிந்த மனத்தையுடைய நான் இன்னுமொரு முறை அவரது திருக்கூத்தைக் காண்பேனோ? எ.று.
அருளே திருமேனியாக வுடையவன் என்பது ஞானநூற் கருத்தாதலின், “அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்” என்று மொழிகின்றார். பெருமான் அடிகள் என்பது திருக்கடவூர் மயானத்துச் சிவனுக்குரிய பெயர்களுள் ஒன்று. “அடியார் அடியார் தங்கள் பிறவி தீர்ப்பர் பெருமான் அடிகளே” (கட. மயா.) என நாவுக்கரசர் உரைப்பது காண்க. பொன்னம்பலத்தில் ஆடி யருளுகின்ற பெருமானது அருட் கோலத்தைக் கண்டு இன்புற்ற மகிழ்ச்சியைத் “தெருளே வடிவாம் அடியவர் போல் சிறியேன் கண்டேன் சீர் உற்றேன்” எனவும், சிவஞானத்தால் தெளிந்த உள்ளமுடையவர்கள் சிவனடியார்கள் என்பது விளங்க, “தெருளே வடிவாம் அடியவர் போல்” எனவும், தமது பணிவுடைமை தோன்றச் “சிறியேன் கண்டேன்” எனவும், சிவக்காட்சியால் தாம் எய்திய சிறப்பைச் “சீர் உற்றேன்” எனவும் தெரிவிக்கின்றார். மண்ணகத்து மையல் மானுட வடிவ முடைய ராதலால் மறப்புக்கு இடனாயதை யெண்ணி, “மருளே வடிவேன் ஆதலினால் மறந்தேன் பிரிந்து மதி கெட்டேன்” என்று வருந்துகின்றார். திருநடக் காட்சியில் தோய்ந்த கண்ணும் கருத்தும் பிரிந்தமைக்கு வருந்துமாறு தோன்றப் “பிரிந்தே மதி கெட்டேன்” என வருந்துகின்றார். அருள் ஒளியில் நின்று ஒளிர்ந்த தமது மனம் பிரிந்து உலகியலை நோக்கி இருண்டமை வெளிப்பட “இருளேர் மனத்தேன்” என்றும், கண் ஒளி பெற்றிருந் திழந்தவன், மீளவும் அதனைப் பெறுதற்கு அவா வுறுதல் போலத் திருநடக் காட்சியை மறுவலும் பெறற்கு ஆர்வுற்று அலமரும் நிலையை, “நான் இன்னும் ஒருகால் காண்பேனோ” எனவும் இசைக்கின்றார்.
இதனால், திருநடக் காட்சியை மீண்டும் மீண்டும் காண்டற் கெழும் ஆசையை வெளிப்படுத்தவாறாம். (8)
|