1348. அன்னோ திருஅம் பலத்தேஎம்
ஐயர் உருக்கண் டேன்அதுதான்
பொன்னோ பவளப் பொருப்பதுவோ
புதுமா ணிக்க மணித்திரளோ
மின்னோ விளக்கோ விரிசுடரோ
மேலை ஒளியோ என்உரைப்பேன்
என்னோ அவர்தந் திருஉருவை
இன்னும் ஒருகால் காண்பேனோ.
உரை: ஆ! திருவம்பலத்தின்கண் எமது தலைவரான கூத்தப் பெருமான் திருவுருவைக் கண்டேன்; அது நிறத்தாற் பொன்னோ? பவள மலையோ? புதிதாய் அமைந்த மாணிக்க மணிகளின் திரட்சியோ? மின்னலோ? விளக்கமோ? விரிகின்ற சுடர்தானோ? மேலை வானுலகத் தொளிரும் ஒளியோ? என்னென்று கூறுவேன்? என்னவோ, தெளிவுற விளங்கிற்றிலதாயினும், அவரது திருவுருவை இன்னும் ஒருமுறை காண்பேனோ? எ.று. ஐயன் - தலைவன்; ஈண்டுச் சிவபெருமான் மேற்று. மேனி பொன் வண்ணமாதலின் “பொன்னோ” என்றும், வாயும் கையும் திருவடியும் நிறத்தால் பவளம் போறலின், “பவளப் பொருப்போ” என்றும் கூறுகிறார். நாட்பட்டு ஒளி மழுங்கிய செம்மணி போலாது புதிது திரட்டப் பட்டது போறலின் “புது மாணிக்க மணித்திரளோ” எனவும், திருமுடியில் விளங்கும் செஞ்சடை மின்னொளியும் விளக்கொளியும் போறலின், “மின்னோ விளக்கோ” எனவும் கூறுகிறார். விரிசுடர் - செஞ்ஞாயிறு. அவரது திருவடி செஞ்ஞாயிறு போல்வதால், “விரி சுடரோ” என்கிறார். “அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி” (அதிகை) என அப்ப மூர்த்திகளும் கூறுப. ஒளி தரும் பொருள்கள் பலவற்றை மனக்கண்ணால் கண்டு தெளிந்துரைத்தும் ஆராமையால், மேலை வானுலகத்துத் தேவர்களாற் கண்டு பரவப்படும் ஒளியோ என்றையுறு வாராய், “மேலை ஒளியோ” என வுரைக்கின்றார். மேலை ஒளி - மேலைத் திசையில் அந்திப் போதில் தோன்றும் செக்கர் ஒளி எனினுமாம்.
இதனால், சிவபெருமானின் திருமேனி நிறப் பொலிவு கண்டு வியந்துரைத்தவாறாம். (9)
|