பக்கம் எண் :

1351.

     சேர நெஞ்சமே
          தூரம் அன்றுகாண்
     வாரம் வைத்தியேல்
          சாரும் முத்தியே.

உரை:

      இறைவன் திருவருளாகிய முத்தி சேர வேண்டுவையேல் அது தூரத்தில் இல்லை; அதன்பால் நீ அன்பு செய்வாயாயின், அம் முத்தி நிலை தானாகவே வந்து உன்னைச் சாரும் காண். எ.று. முதற் றிருப்பாட்டில் முத்திநிலையை அருட்பெற்றி என்றாராகலின் ஈண்டு அதனை வருவிக்கின்றார். முன்னைப் பாட்டின் அந்தத்தில் நின்ற 'சேர' என்ற சொல் இப்பாட்டின் ஆதியாய் நின்று இயைத்தலால் அருட் பெற்றியாகிய திருவருள் முத்திநிலை வருவிக்கப்பட்டது. நெடுந் தூரத்தில் உள்ளது போலும் முத்திநிலை என எண்ணி அயராமைப் பொருட்டு, “தூரம் அன்றுகாண்” என்று நெஞ்சிற்கு அறிவுறுத்து ஊக்குகின்றார். மிக அணிமையிற் பெறற் கெளிதாயது என்றற்கு “வாரம் வைத்தியேல் சாரும் முத்தியே” என்று உரைக்கின்றார். வாரமாவது அன்பு. சிவன்பால் அயரா அன்பு செய்யின் முத்தி இனிதின் எய்தும் என்ற கருத்துப் படவே, “வாரம் வைத்தியேல் சாரும் முத்தியே” என்கின்றார். “சாயா அன்பினை நாடொறும் தழைப்பவர் தாயேயாகி வளர்த்தனை போற்றி” என உரைத்து, அவ்வன்பரது அன்பு வலையில் அவனே அகப்பட்டு முத்தி தருவது இயல்பு என்பாராய்ப் “பத்தி வலையிற் படுவோன் காண்க” என மணிவாசகர் பகர்கின்றமை காண்க.

     இதனால், சிவன்பால் அன்பு வைப்பது முத்திப் பேற்றுக்கு உபாயமாதல் காணலாம்.

     (2)