பக்கம் எண் :

1379.

     தேவேநின் அடிநினையா வஞ்ச நெஞ்சைத்
          தீமூட்டிச் சிதைக்கறியேன் செதுக்கு கில்லேன்
     கோவேநின் அடியர்தமைக் கூடாப் பொய்மைக்
          குடிகொண்டேன் புலைகொண்ட கொடியேன் அந்தோ
     நாவேற நினைத்துதியேன் நலமொன் றில்லேன்
          நாய்க்கடைக்கும் கடைப்பட்டேன் நண்ணு கின்றோர்க்
     கீவேதும் அறியேன்இங் கென்னை யந்தோ
          என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

உரை:

      தேவனே, நின் திருவடியை நினைந் தொழுகாது வஞ்சம் புரிந் தொழுகும் நெஞ்சினைத் தீமூட்டி அதன்கட் பெய்து சிதைத்தோ, உளி கொண்டு செதுக்கியோ அழிக்க முடியாமல் உள்ளேன்; தலைவ, நின்னுடைய அடியார்களோடு கூடாமல், பொய்யர் கூடத்திடையே குடி புகுந்திருந்து புலைத்தன்மையால் கொடியனாக இருக்கின்றேன்; அந்தோ, யான் நாவார நின்னைத் துதிப்பதில்லை; நற்பண்பு நற்செய்கையு முடையேனல்லேன்; நாயினத்தில் கடையாய இனத்தில் கடைப்பட்ட நாயாயினேன்; என்னை அடைந்தோர்க்கு யாதும் ஈந்தறியேன்; இல்வுலகில், அந்தோ, என் குற்றம் பற்றி எத்தகைய தண்டத்துக் குள்ளாக்கித் துன்புறுத்தினும் அவை போதாவாகும். எ.று.

     தேவர்களின் பொதுப் பெயர் தேவு என்பது. தேவரனைவரினும் முதற்றேவராதல் பற்றி, “தேவே” என்று சொல்லுகின்றார். நினைத்தற் குரிய நெஞ்சு பெற்றவன் இறைவன் திருவடியை நாளும் நினைப்பது கடனாகவும், நினைத்தலைச் செய்யாத நெஞ்சால் பயனேதும் இல்லை; மேலும், திருவடியை நினைப்பதை விடுத்து வஞ்ச நினைவுக்கு இடமாய்த் தீமை செய்வதுபற்றி அதனைத் தீயிலிட்டு அழிப்பது நன்றென்பாராய், “நின் அடி நினையா வஞ்ச நெஞ்சைத் தீமூட்டிச் சிதைக்கறியேன்” என்று கூறுகின்றார். உருவாய உடலின்கண் அருவாய நெஞ்சின் இருப்பும் இயலும் தெரியாமையால் பிரித்தெடுத்து தீயிட்டெரிக்க முடியவில்லை என்றற்குத் “தீ மூட்டிச் சிதைக்கறியேன்” என்று தெரிவிக்கின்றார். இந்நாளையில் லார்டு பிரெய்ன் என்ற உடல் விஞ்ஞானி நினைக்கும் கருவி தலையிலுள்ள மூளையிடமாக வுளது என்று உரைக்கின்றார். மரப்பட்டை போல உடற்குள் எங்கேனும் எதனோடேனும் ஒட்டியிருந்து இத் தீதினைப் புரிகுவதாயின், அது காணப்படுமாயின், கூரிய கத்தி கொண்டு சீவி நீக்கி விடுவேன்; அதற்கும் வழியில்லையே என்று வருந்திச் “செதுக்குகில்லேன்” என்கின்றார். கோ - தலைவன். மக்கள் மனமும் அறிவும் கூடியுறையும் இனத்தாலும் சூழலாலும் சிறுமை நீங்கி ஏற்றமடையும். மனத்து உளது போலத் தோன்றினும் ஆராயந்து நோக்குமிடத்து மாந்தர்க்கு அறிவு இனமான சூழலால் செப்பமுறுகிறதெனத் திருவள்ளுவர் அறிவுறுத்துகின்றார். அடியார் இனமும் சூழலும் திருவடி ஞானத்தை நல்கி அத் திருவடியை நினைந்தொழுகும் மாண்பினை நல்கும்; யான் அக்கூட்டத்தைச் சேர்ந்திலேன் என்பாராய், “நின்னடியர் தமைக் கூடா” என்றும், தாம் கூடியிருந்த சூழல் இது என்பார், “பொய்ம்மைக் குடி கொண்டேன்” என்றும் புகல்கின்றார். பொய்யே வழங்கும் சூழலையும் பொய்யர் கூட்டத்தையும் “பொய்ம்மை” எனப் பொதுப்படக் குறிக்கின்றார். அதனால் தாம் பெற்றன இவை எனக் கூறலுற்று, யான் புலைத்தன்மையும் கொடுமை நினைவு செயல்களும் எய்தப் பெற்றேன் என்பாராய், “புலை கொண்ட கொடியேன்” என்றெடுத்து “அந்தோ” என இரங்கி மொழிகின்றார். இவ்வாற்றால், இறைவனைத் துதியாமல் தவறியதற்கு மனம் வருந்தி, “நாவேற நினைத் துதியேன்” என்றும், அதனால் நலமொன்றும் பெறா தொழிந்தமை தோன்ற, “நலமொன்றில்லேன்” என்றும், இத்தகைய பொருந்தா வொழுக்கத்தால் கடைப்பட்ட நிலைமை எய்தியது நினைந்து, “நாய்க்கடைக்கும் கடைப்பட்டேன்” என்றும், நாடி வருபவர்க்கு யாதேனும் சிறிது உதவுதற்கும் இல்லாத வறியனாதலோடு நினைவதும் இல்லேனாயினேன் என்பார், “நண்ணுகின்றோர்க்கு ஈவதும் அறியேன்” என்றும் இயம்புகின்றார். இக் குற்றத்தின் நீங்கித் தூய்மையும் நலமும் பெறுதற்குக் கழுவாய் ஒன்றும் தோன்றாமையால், “இங்கு என்னை அந்தோ என் செயினும் போதாதே எந்தாய்” என்று புலம்புகின்றார்.

     இதன்கண், திருவடியை நினையா நெஞ்சின் கொடுமையையும் அடியார் கூட்டத்தைச் சேர்ந்தொழுகாத தீமையையும், நாவேறத் துதியாத குற்றத்தையும் நினைந்து மொழிந்து வருந்துமாறு காணலாம்.

     (10)