பக்கம் எண் :

74. உள்ளப் பஞ்சகம்

பொது

    அஃதாவது, முக்கட் பகவனது பரமாந் தன்மையை உள்ளத்துட் கொண்டிருக்கும் திறம் வியந்து ஐந்து பாட்டுக்களால் பாடுவது. பஞ்சகம் ஐந்து பாட்டுக்களாலாயது. இதன்கண், முக்கட் கடவுளை உள்ளத்திற் கொண்ட பெருமிதம் தோன்ற, சிவபரம் பொருளின் மேலாந்தன்மையையும், அப்பரம் பொருளின் எட்டவும் சுட்டி யறியவும் படாப் பெருந்திறத்தையும், ஊனக் கண்கட்குப் புலப்படா நுண்மையையும் உள்ளத்துள்ளிருந்து அகள, சகள உருவாய் அருள் செய் திறத்தையும் வள்ளற் பிரான் மகிழ்ந்தோதி விம்மித முறுவது காணலாம்.

கட்டளைக் கலித்துறை

1380.

     நீரார் சடையது நீண்மால் விடையது நேர்கொள்கொன்றைத்
     தாரார் முடியது சீரார் அடியது தாழ்வகற்றும்
     பேரா யிரத்தது பேரா வரத்தது பேருலகம்
     ஓரா வளத்ததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.

உரை:

      கங்கையாறு தங்கிய சடையை யுடையதும், நீண்ட திருமாலாகிய விடையை யுடையதும், நேர்படத் தொடுத்த கொன்றை மாலையை யணிந்த முடியை யுடையதும், நினைந்தார்க் குண்டாகும் தாழ்வைப் போக்கும் திருப்பெயர் ஆயிரம் உடையதும், மாறாத வரங்களை நல்குவதும், பெரிய வுலகத்தவரால் அளந்துணர மாட்டாத வளத்தை யுடையதுமாய், ஒன்றாய் உள்ள பரம்பொருள் மூன்று கண்களுடன் என் மனத்தின்கண் உளது, காண். எ.று.

     நீர் - கங்கையாறு. உலகங்களை யளத்தற் பொருட்டு அண்ட முகட்டுக்கு மேல் நீண்டமை பற்றித் திருமாலை, “நீண்மால்” என்று சிறப்பிக்கின்றார். திருமால் விடை யுருவாய்த் தாங்குகின்றான் என்னும் புராணச் செய்தி பற்றி, “நீண்மால் விடையது” என்று விளம்புகின்றார். மாணிக்கவாசகரும், “மால் விடையூர்தி போற்றி” (சதக) என்பது காண்க. கொன்றையே மாலைபோல் மலர்வதாகலின், அதனை “நேர் கொள் கொன்றை” என வுரைக்கின்றார். தார் - மாலை. சேர்ந்தாரது பிறவிப் பிணி தீர்க்கும் சீர்மை யுடையது என்றற்குத் திருவடியைச் “சீரார் அடியது” என்று போற்றுகின்றார். தாழ்வு - மல கன்மங்களால் உண்டாகும் குற்றம். சிவபிரான் பேராயிரம் உடைய னென்பது பற்றி “பேர் ஆயிரத்தது” என்கின்றார். “ஞானப்பேர் ஆயிரம் பேரினான்” (காணப்) என்பர் ஞானசம்பந்தர். பேரா வரம் - மாறாதவரங்கள். தேவருலக முட்பட வுரைத்தலால் பேருலகம் என்றும், பேருலகத்துத் தேவராலும் மக்களாலும் அளப்பரும் இன்ப வளமுடையவ னென்றற்கு, “பேருலகம் ஓரா வளத்தது” என்றும் பேசுகின்றார். “உம்பராலும் உலகின்னவராலும், தம் பெருமையளத்தற் கரியான்” (நறை. சித்தீச்) என ஞானசம்பந்தர் நவில்வ தறிக.

     இதனால், முக்கட் பரமனை உள்ளத்திற் கொண்ட பெருமிதத்தை விதந்தோதிய வாறாம்.

     (1)