பக்கம் எண் :

1383.

     தண்ணார் அளியது விண்ணேர் ஒளியது சாற்றுமறைப்
     பண்ணார் முடிவது பெண்ணார் வடிவது பண்புயர்தீக்
     கண்ணார் நுதலது கண்ணார் மணியது கண்டுகொள்ள
     ஒண்ணா நிலையதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.

உரை:

      தண்ணிய அருளைப் பொழிவதும், விண்ணகத்தும் ஓங்கிய ஒளியையுடையதும், இசையமைத்தோதும் மறைகளின் முடி பொருளாயிருப்பதும், உமாதேவியாகிய பெண்ணொரு கூறாய வடிவு பொருந்தியதும், பண்பால் உயர்ந்த நெருப்பைத் தன்னுட் கொண்ட கண்ணமைந்த நெற்றியையுடையதும், கண்ணிற் கருமணி போல்வதும், ஊனக் கண்ணாற் காண்டற் கரியதுமாய், ஒன்றாய் உள்ள பரம்பொருள் முக்கண்ணுடன் என் நெஞ்சின்கண் உளது. எ.று.

     அன்பு மிக்க வழித் தோன்றும் அருளினும் சிறந்தமை விளங்கத் “தண்ணார் அளியது” எனவும், அதனொள்ளிய தண்ணொளி வானுலகத்துக்கு அப்பாலும் சென்று பரவுவ தென்றற்கு “விண்ணேர் ஒளியது” எனவும் உரைக்கின்றார். மண்ணவரோடு விண்ணவரும் இசை கலந்து பாடும் இயல்பினதாகலின், வேதத்தின் முடிபொருளாய்த் திகழும் சிவனை, “சாற்று மறைப் பண்ணார் முடிவது” என்று இயம்புகின்றார். பெண்ணமரும் திருமேனி யுடையனென்பது பற்றி, “பெண்ணார் வடிவது” என்றும் தன்பாற்பட்ட எதனையும் வெந்து தூய்மையுறச் செய்யும் பண்புடைமை பற்றித் தீயைப் “பண்புயர் தீ” என்றும், அதனைக் கண்ணிலேயுடைமை தோன்றத், “தீக்கண்ணார் நுதலது” என்றும் தெரிவிக்கின்றார். கண்ணுக்கு ஒளியும் காட்சியும் நல்கும் மணிபோல உயிர்கட்கு ஞான நாட்டமும் ஞான வொளியும் நல்கும் நயம் விளங்க, “கண்ணார் மணியது” எனவும், எனினும், அப்பெருமானது அருளாலன்றி ஊனக் கண்களால் காணப்படாத மேனிலையில் இருப்பவன் என்றற்குக் “கண்டு கொள்ள வொண்ணா நிலையது” எனவும் இயம்புகின்றார்.

     இதனால், ஊனக் கண்களாற் காணாக் காட்சியன் கண்ணுதற் பரமன் என்பது கட்டுரைத்தவாறாம்.

     (4)