பக்கம் எண் :

1384.

     பிறவா நெறியது பேசா நிலையது பேசில்என்றும்
     இறவா உருவதுள் ஏற்றால் வருவ திருள்அகன்றோர்
     மறவா துடையது மாதோர் புடையது வாழ்த்துகின்றோர்
     உறவாய் இருப்பதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.

உரை:

      பிறவாமைக் கேதுவாகிய நெறிக்குரியதும், இத்தன்மைத்தென்று ஓதவும் உணரவும் ஒண்ணாததும், எடுத்துரைக்கலுற்றால் முடிவின்றி நீளும் திருமேனி யியல்புடையதும், உள்ளத்தில் உண்மையுடன் ஏற்றுக் கொண்டால் அருளுருவாய் வருவதும், அறியாமை யிருளினின்றும் நீங்கிய பெருமக்கள் மறவா வண்ணம் எழுந்தருளி யிருப்பதும், மலைமங்கையை ஒருபால் உடையதும், வாழ்த்தி வணங்கும் அடியவர்க்கு நெருங்கிய உறவாய் ஆதரவு செய்வதுமாய் ஒன்றாய் உள்ள பரம்பொருள், முக்கண்ணுடன் என் நெஞ்சின்கண் உளது. எ.று.

     பிறவாமைக் கேதுவாகிய, ஞான நெறியில் நிற்பார்க்கு எய்தப் பெறும் பொருளாதலால், “பிறவா நெறியது” என்றும், மன மொழிகட்கு அப்பாற்பட்டதாகலின், “பேசா நிலையது” என்றும் எடுத்துரைக்கின்றார். அதனை உணர்ந்தோர் உரைப்பன கொண்டு உணர்ந்து பேசலுறின் எல்லையின்றிப் பெருகுவதால் “பேசில் என்றும் இறவா வுருவது” எனவும், உணர்த்துவன வற்றால் உண்மையை உள்ளத்திற் கொண்டால் அருளுருவாய் எழுந்தருள்வது புலப்பட “உள் ஏற்றால் வருவது” எனவும் இயம்புகிறார். இங்ஙனம் மெய்ம்மை யுணர்ந்தவர் ஐயம் திரிபுகளை விளைவிக்கும் அறியாமை இருளகன்று எப்போதும் மறவாது உள்ளத்தில் வைத்துப் போற்றுப்படுவது விளங்க, “இருளகன்றோர் மறவா துடையது” எனக் கூறுகின்றார். அகளமாய் நிற்கும் பரசிவம் சகளமாய்த் தோன்றும் நிலையில் மாதொரு கூறனாய்ப் புலப்படுதலால், “மாதோர் புடையது” என்றும், அதனை வாழ்த்தி வழிபடுவோர்க்கு அம்மையப்பனாய் மாமன் மாமி என்ற உறவாய் அருள் வழங்குவது தோன்ற “வாழ்த்துகின்றோர் உறவாய் இருப்பது” என்றும் உரைக்கின்றார்.

     இதனால், முக்கட் பரமன் உள்ளத்தில் இருந்து அகளமாயும் சகளமாயும் உருவாயும் அருள் செய்யுள் திறம் உரைத்தவாறாம்.

     (5)