பக்கம் எண் :

1389.

     பொருளே அடியர் புகலிட
          மேஒற்றிப் பூரணன்தண்
     அருளேஎம் ஆருயிர்க் காந்துணை
          யேவிண் ணவர்புகழும்
     தெருளேமெய்ஞ் ஞானத் தெளிவே
          மறைமுடிச் செம்பொருளே
     மருளேத நீக்கும் ஒளியே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      நாம் பரவும் வடிவுடை மாணிக்கம், நமக்கு மெய்ப்பொருள்; அடியராயினார்க்குப் புகலிடமாவள்; திருவொற்றியூரில் உள்ள பூரணனாகிய சிவனது தண்ணிய அருளே உருவானவள்; எங்களுடைய அருமையான உயிர்க்கு உரியதான துணை; விண்ணுலகத் தேவர்கள் புகழ்கின்ற தெளி பொருள்; மெய்ம்மை ஞானத்தின் தெளிவாய் அமைந்தவள்; வேத முடிவாய் விளங்கும் செம்பொருள்; மருளாகிய தன்மையால் உண்டாகும் குற்றங்களைப் போக்கும் ஒளிவடிவாயவள். எ.று.

     “பொருள்” எனப் பொதுப்பட மொழிதலால், மெய்ப்பொருள் எனக் கோடல் வேண்டிற்று. சிவனடியார்கள் முடிவில் அடையுமிடமாகிய திருவருள் நிலையம் அவளாதலால், “அடியார் புகலிடம்” என்று கூறுகின்றார். சிவபெருமானைக் குறைவிலா நிறைவு என்பது பற்றிப் “பூரணன்” என்கின்றார். சிவனது அருட் சத்தியாதலால் வடிவுடை மாணிக்கத்தைப் “பூரணன் தண்ணருளே” என்று புகல்கின்றார். உயிர்கள் உய்தி பெறுதற்குத் துணையாகும் கருவிகரணங்களை நல்கு பவளாதல் பற்றி, “எம் ஆருயிர்க்கு ஆம் துணையே” என அறைகின்றார். விண்ணகத் தேவர்க்கு அறிவின்கண் தோன்றும் கலக்கத்தைப் போக்கித் தெருட்டுகின்றாளென்றற்கு “விண்ணவர் புகழும் தெருளே” என விளம்புகிறார். நூல்களாலும் ஆசிரியராலும் காட்டப்படும் மெய்ம்மைப்பொருளைச் சித்தித்துத் தெளியும் வண்ணம் அருளொளி வழங்குபவள் அம்மை என்பது கொண்டு “மெய்ஞ்ஞானத் தெளிவு” என்றும், அது தானும் வேதத்தின் உச்சியிற் காண நிற்கும் செம்பொருள் என்பது விளங்க “மறைமுடிச் செம்பொருள்” என்றும், இத் தெளிவும் செம்பொருளும் எய்திய வழியும் உயிரறிவை மயக்குறுத்தும் இருட் படலத்தை நீக்கியருளும் ஒளி வழங்கும் ஞானத்தாய் என்றற்கு, “மருள் ஏதம் நீக்கும் ஒளியே” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், திருவொற்றியூர் வடிவுடைமாணிக்கம், பொருளும் அடியர் புகலிடமும் ஒற்றிப் பூரணன்தன் தண்ணருளும் உயிர்க்காம் துணையும் விண்ணவர் புகழும் தெருளும் மெய்ஞ்ஞானத் தெளிவும் செம்பொருளும் ஏதம் நீக்கும் ஒளியுமாவன் என்பதாம்.

     (4)