1394. காமம் படர்நெஞ் சுடையோர்
கனவினும் காணப்படாச்
சேமம் படர்செல்வப் பொன்னே
மதுரச் செழுங்கனியே
தாமம் படர்ஒற்றி யூர்வாழ்
பவளத் தனிமலையின்
வாமம் படர்பைங் கொடியே
வடிவுடை மாணிக்கமே.
உரை: அம்மையாகிய வடிவுடை மாணிக்கம், காமவிச்சை பரவி நெஞ்சமுடைய மக்களால் கனவிலும் காணப்படுதல் இன்றி, இன்ப வாழ்வு பெறக் கருதுவோர் விழையும் செல்வமான பொன்னும், இனிமையும் செழுமையும் கொண்ட கனியும் இடம் பரந்த திருவொற்றியூரில் வாழ்கின்ற பவளத்தாலாகிய தனிமலை போன்ற சிவனது இடப்பாகத்தைப் பற்றிக் கொண்டுள்ள பசுமையான கொடியும் போன்றவள். எ.று.
காமம் - மிக்குற்ற பெண்ணாசை. ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் விரும்பும் ஆசை மிக்குப் பெருகியபோது காமமாம்; நிறைவுப் பொருள்தரும் கமம் என்னும் சொல்லினின்றும் வருவது. காமம் என்னும் வடசொற்கு இது பொருளன்று. காமவேட்கை மிக்கவிடத்து மனம் தூய்மை கெடுதலின், காமம் கதுவப்பட்டோர் அம்பிகையைக் கனவிலும் காண்டல் இலராம் என்பது விளங்க, “காமம்படர் நெஞ்சுடையோர் கனவினும் காணப் படாப் பொன்னே” என்று கூறுகின்றார். படர்தல் - நினைத்தல். காண்டற் கரியனவும், காணத் தகாதனவும் கணவின்கட் காணப்படுமாதலின், அதன் அருமையுணர்த்தற்குக் “கனவினும்” எனல் வேண்டிற்று. சேமம் - இன்ப நிறைவு. பொன்னென்பது பண்புப் பெயராதலுண்மையின், பொருளொடு புணர்ந்த பொன்னென்று வரையறுத்தற்குச் “செல்வப் பொன்னே” என்று சிறப்பிக்கின்றார். தாமம் - இடம். சிவபெருமான் செம்மேனி யம்மானாதலின், “பவளத் தனிமலை” யென்று பரவுகின்றார். இடப்பாகத்தே உமையம்மை கூறு கொண்டது பவளமலையிற் பசுங்கொடி படர்ந்தது போன்றுளது என்றற்குப் “பவளத் தனிமலையின் வாமம் படர் பைங்கொடி” என்று கூறுகின்றார். “மரகதக் கொடியுடன் விளங்கும், தெள்ளு பேரொளிப் பவளவெற்பென விடப்பாகம் கொள்ளும் மாமலையாள்” (திருநா. 379) என்று பெரிய புராணம் உரைப்பது காண்க.
இதனால், பொன்னும் செழுங்கனியும் பவளத் தனிமலையிற் படர்பைங்கொடியும் போன்று அம்பிகையான வடிவுடை மாணிக்கம் விளங்குகிறாள் என்பதாம். (9)
|