பக்கம் எண் :

1398.

     சோலையிட் டார்வயல் ஊர்ஒற்றி
          வைத்துத்தன் தொண்டரன்பின்
     வேலையிட் டால்செயும் பித்தனை
          மெய்யிடை மேவுகரித்
     தோலையிட் டாடும் தொழிலுடை
          யோனைத் துணிந்துமுன்னாள்
     மாலையிட் டாய்இஃ தென்னே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      வடிவுடை மாணிக்கம் என்ற அம்பிகையே, சோலைகளையும் நெல்வயல்களையும் இடையிடையே கொண்ட ஊரை ஒற்றி வைத்துவிட்டுத் தனக்குத் தொண்டராயினார் அன்பினால் ஏதேனும் வேலை தந்தால் தாழாமற் செய்யும் பித்துடையவனும், தன் உடம்பின்மேல் யானையின் தோலைப் போர்த்துக்கொண்டு ஆடும் தொழில் உடையவனும் ஆகிய சிவனை, முன்னை நாளில் ஏற்ற கணவனாகத் துணிந்து மாலையிட்டு மணந்து கொண்டாயே; இச்செயலை என்னென்பது? எ.று.

     நன்செய் வயல்களுக்கு இடையே சோலைகள் வைப்பது, வயலில் விளையும் நெல்லை அறுத்துக் கொணர்ந்து சோலையில் போர்க்களம் செய்து அடித்து நெல் வேறு வை வேறாக்கும் பணி செய்தற்காதலின், அதனைச் “சோலையிட்டார் வயல் ஒற்றியூர்” எனப் புகழ்கின்றார். ஊர்ப்பெயர் ஒற்றி என்பது கொண்டு “ஊர் ஒற்றிவைத்து” என வுரைக்கின்றார். தொண்டராயினார் அன்போடும் செயல் வேண்டும் பணிகளை, திருவாரூரில் சுந்தரர் பொருட்டுப் பரவையார் மனைக்குத் தூது சென்றது போலும் பணிகளைச் செய்து மகிழ்விக்கும் நற்பணியைச் செய்தது பற்றி, “தொண்டர் அன்பின் வேலையிட்டால் செயும் பித்தனை” என்று பேசுகின்றார். அன்பர்க்குப் பணிசெய்யும் வகையில் அளவிறந்த ஆர்வமுடைய ரென்பது பற்றிச் சிவனைப் “பித்தன்” என்று கூறுகின்றார். “பித்தர் இறை என்றறிந்து பேதைபால் தூதனுப்புவித்த தமிழ்ச் சமர்த்தர்” என்று சுந்தரரைத் தாயுமானவர் பாராட்டி யுரைப்பது காண்க. யானைத் தோலைப் போர்வையாகப் பூண்டு சுடுகாட்டில் ஆடுவது பற்றி, “மெய்யிடை மேவுகரித் தோலையிட்டாடும் தொழில் உடையோன்” என்று சிவனைச் சிறப்பிக்கின்றார். பித்தனாய், கரித்தோலைப் போர்த்து ஆடுபவனாய் விளங்கும் சிவனை, இளநங்கையாகிய நீ மனம் துணிந்து மாலையிட்டு மணந்தது வியப்பாகவுளது என்றற்கு, “இஃது என்னே?” என வியந்து கேட்கின்றார்.

      இதன்கண், தொண்டர் அன்பால் ஏவிய பணி செய்தலும் கரித்தோலைப் போர்த்து ஆடலும் உடையவனை ஒரு பெண்ணும் மணக்க விரும்பாளாக, உமாதேவி மணந்து கொண்டது மிக்க வியப்பாகவுளது என்பதாம்.

     (13)