147. தேனும் தெள்ளிய வமுதமும் கைக்குநின்
திருவருட் டேனுண்டே
யானும் நீயுமாய்க் கலந்துற வாடும்நாள்
எந்த நாள் அறியேனே
வானும் பூமியும் வழுத்திடும் தணிகைமா
மலை யமர்ந்திடு தேவே
கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய
குமார சற்குணக் குன்றே.
உரை: வானுலகத் தேவர்களும் நிலவுலக மக்களும் வழிபடும் தணிகை மலையில் எழுந்தருளும் தேவனே, தலைவனும் தற்பர குருவுமாய் விளங்குகிற குமரக் கடவுளாகிய மெய்ம்மைக் குணக் குன்றாயவனே, தேனும் தெளிந்த அமுதமும் சுவையிற் பிற்படுகின்ற திருவருளாகிய தேனை யுண்டு நீயும் நானுமாய்க் கலந்து உறவு பேசி மகிழும் அந்த நாள் எந்த நாள்? யான் அறியேன், எ. று.
வான் - தேவருலகம். வானவரும் மக்களும் சேர நின்று வழி படுவது தணிகைமலை என்பதாம். தேவ தேவனாதலால், “தேவே” என்கின்றார். கோன் - தலைவன். தனி நிலையில் மேலாய குரு முதல்வனாதலால் “தற்பர குரு” என்று சிறப்பிக்கின்றார். சற்குணம் - மெய்ம்மையாகிய குணம். மாறாத நிலைத்த குண வுருவன் என்றற்குக் குணக் குன்றென உருவகம் செய்கின்றார், திருவருளைத் தேனாகக் கூறுதலால் அதன் சிறப்பைத் “தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும் திருவருள் தேன்” என்று மொழிகின்றார். அருள் பெற்ற மேலோர் இறைவன் பால் உடனிருந்து இன்புறும் திறத்தை, “யானும் நீயுமாய்க்” கலந்திருந்து உறவாடுதல் என்று விளம்புகிறார்.
இதனால் திருவருட்பேறு பெற்றார் இன்புறும் திறம் உரைத்தவாறாம். (7)
|