1484. பொய்விட்டி டாதவன் நெஞ்சகத்
தேனைப் புலம்பும்வண்ணம்
கைவிட்டி டாதின்னும் காப்பாய்
அதுநின் கடன்கரும்பே
மெய்விட்டி டாருள் விளைஇன்ப
மேஒற்றி வித்தகமே
மைவிட்டி டாவிழி மானே
வடிவுடை மாணிக்கமே.
உரை: கரும்பு போல் நினைக்கும் தோறும் இன்பந் தருபவளே, மெய்யுணர்வைக் கைவிடாத ஞானிகளின் உள்ளத்தில் விளைகின்ற இன்பமே, திருவொற்றியூரில் வீற்றிருக்கின்ற ஞானத் திருவுருவே, மைதீட்டிய கண்களையுடைய மான் போன்றவளே, வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே! பொய்மைநீங்காத வன்மனத்தையுடைய என்னைத் தனித்திருந்து வருந்துமாறு கைவிடாமல், இப்பொழுது பாதுகாப்பாக அருளுவது உனக்குக் கடனாகும். எ.று.
தின்பதற்கு இனிக்கும் கரும்புபோல உன்னிப் பரவும் தோறும் இன்பத்தேன் பெருக்கி மகிழ்விப்பது பற்றி, வடிவாம்பிகையை “கரும்பே” என்று புகழ்கின்றார். மெய்யுணர்வுடைய பெருமக்கள் உள்ளத்தில் உணருந்தோறும் இன்பம் மேன்மேலும் பெருகத்தந்து மெய்ம்மை நெறிக்கண் நிலைபெற நிற்குமாறு இன்பந்தந்து சிறப்பிப்பதுபற்றி “மெய்விட்டிடார் உள் விளை இன்பமே” என்றும், அவளது திருவொற்றியூரிற் கோயில் கொண்டிருக்கும் திருவுருவம் ஞான உருவாய்த் திகழ்வதனால் “ஒற்றி வித்தகமே” என்றும், ஒற்றியூரில் காட்சி தரும் அவளது பெண்மை வடிவம் மையுண்ட கண்ணும் மான்போன்ற விழியும் கண்டு தொழுவார்க்கு இன்பம் செய்தலின் “மைவிட்டிடாத விழி மானே” என்றும் பாராட்டுகின்றார். தமது நெஞ்சின்கண் பொய்யுணர்வுகளும் இரக்கமற்ற எண்ணங்களும் நிலவுவதை உணர்ந்து, அவற்றால் திருவருட்பேறு எய்துவது தடையாவது கண்டு, “பொய் விட்டிடாத வன்னெஞ்சத்தேன்” எனத் தன்னையே நினைந்து வடலூரடிகள் நொந்து கொள்கிறார். வடிவாம்பிகையின் திருவருளல்லாது தமக்கு வாழ்வுண்டாகத் துணையாவது பிறிது இல்லை என்ற நிலைமையை விளக்குதற்கு, “புலம்பும் வண்ணம் கைவிட்டிடாது இன்னும் காப்பாய் அது நின்கடன்” என்று முறையிடுகின்றார்.
இதன்கண், அம்பிகை அருள் புரியாது கைவிடுவாளாயின் உலகியல் வாழ்விலும் திருவருள் வாழ்விலும் துணையின்றித் தனித்துக் கெடுந்திறமை உண்டாம் என்று உள்ளங் கலங்கி உரைக்கின்றார். மெய்யுணர்வு பெற்று அது தரும் மெய்யொளியின் உண்மை வாழ்வு நடாத்தும் மெய்ஞ்ஞானிகளுக்குத் திருவருள் பெருகத் தந்து உதவி புரியும் வடிவாம்பிகையின் அருள் நலத்தையும் பெரிது எடுத்து மொழிகின்றார். (99)
|