1486. வாழிநின் சேவடி போற்றிநின்
பூம்பத வாரிசங்கள்
வாழிநின் தாண்மலர் போற்றிநின்
தண்ணளி வாழிநின்சீர்
வாழிஎன் உள்ளத்தில் நீயுநின்
ஒற்றி மகிழ்நரும்நீ
வாழிஎன் ஆருயிர் வாழ்வே
வடிவுடை மாணிக்கமே.
உரை: வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே நின் திருவடி போற்றி, செவ்விய அத்திருவடிகள் வாழ்க, நின்னுடைய அழகிய திருவடிகளாகிய தாமரைகள் வாழ்க, நின்திருவடியாகிய ஞான மலர்கள் போற்றி, நீ அடியவர்ட்குச் செய்யும் திருவருளாகிய தண்ணளி வாழ்க. நின்னுடைய புகழ்கள் வாழ்க, அடியேனுடைய உள்ளத்தில் நீயும் நின்னை ஒரு கூறாக உடைய நின் கணவராகிய சிவபெருமானாகிய கணவரும் எழுந்தருளி வாழ்க, என் ஆருயிர்க்கு வாழ்வு தரும் முதற் பொருளாகிய நீவிர் வாழ்க. எ.று.
'கடலமுதே' எனத் தொடங்கிச் 'செவ்வாயார் அமுதே வடிவுடை மாணிக்கமே' என முடியும் பாட்டீறாக நூறு திருப்பாட்டுக்களால் வழிபட்ட வடலூரடிகள், இப்பாட்டின்கண் வாழ்த்துக்கூறி வடிவுடை மாணிக்கமாலை என்ற இனிய பாமாலையை முடிக்கின்றார். இச்சொல் மாலையைத் திருவடிக் கண் சூட்டுவது கருத்தாதலின், அத்திருவடியை “வாழிய நின் சேவடி” என்றும், சிவபோக ஞான நிலையமாதல் பற்றிப் “போற்றி” என்றும் பரவுகின்றார். திருவடியே அடியார்கட்குப் பற்றுக்கோடாதல் பற்றி, அம்மையின் திருவடித் தாமரைகளை “பூம்பத வாரிசங்கள்” என்றும், தோற்ற இறுதிகட்கு நிலையமாதல் தோன்ற “தாள் மலர்” என்றும் அத்திருவுள்ளத்தில் ஊறிப் பெருகி உயிர்களின் மேல் பாய்ந்து பிறவி வெம்மையைத் தணிக்கும் இயல்பு பற்றி “போற்றி நின்றண்ணளி” என்றும் புகழ்கின்றார். தனக்குத் தானே ஆதாரமும் ஆதேயமுமாதலின் அம்பிகையின் புகழை “நின்சீர் வாழி” என்று வாழ்த்துகின்றார் திருவொற்றியூரில் கோயில் கொண்டருளும் அம்மையப்பராகிய தியாகப் பெருமானும் வடிவாம்பிகையும் அருள் கொண்டு, இருவரும் பிரிவின்றித் தமது உள்ளத்தில் எழுந்தருளி, அறிவோட்டமும் செயல் திறனும் அருளுதல் பற்றி இருவரையும் சேரக் கொண்டு “என் உள்ளத்தில் நீயும் நின் ஒற்றி மகிழ்நரும் எழுந்திருந்தருள்க என்று வேண்டுவாராய், என்னுள்ளத்தில் நீயும் நின் ஒற்றி மகிழ்நரும் “வாழ்க” என்று கூறுகிறார். அவர்களுடைய இருப்பு உயிர் வாழ்வு இனிது உலகில் இயலுதற்கு முதன்மைக் காரணமாதலின் “வாழி என் ஆருயிர் வாழ்வே” என்று வாழ்த்தி மகிழ்கின்றார்.
இதனால், உலகில் வாழும் உயிர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத அறிவு செயல்கட்கு இயக்கம் அருளுகின்ற ஞான மூர்த்தமும் செயலாற்றலும் திருவொற்றியூர்த் தியாகப்பெருமானும் வடிவாம்பிகையும் ஆம் என்பது வலியுறுத்தப்பட்டது. (101)
|