பக்கம் எண் :

77. திருவுலாப் பேறு

தலைவி பாங்கியொடு கிளத்தல்

    அஃதாவது, திருவொற்றியூரில் தியாகப் பெருமான் திருவுலா வரக் கண்ட பெருந்திணைத் தலைவி அப்பெருமான்பால் பெருங் காதல் வேட்கை எய்தப் பெற்றமை யுரைப்பது.

    “காமத் திணையிற் கண்ணின்று வரூஉம் நாணும் மடனும் பெண்மைய” (தொல். கள) வாயினும், தலைவிக்கும் தோழிக்கும் உள்ள உரிமை யொருமை பற்றித் தோழிக்குக் கூறலும் தனக்குக் கூறலே போல்வது பற்றி, “மிக்க காமத்து மிடல்” கொண்ட தலைவி, நாணுவரையிறந்து தகுவனவற்றைத் தோழிக்கு இப்பகுதியிற் சில கூறுவது அமையுமென அறிக. அகனைந்திணைக்குப் பொருந்தாமல் பெண்மைக் காமத்திணைக்குப் பொருந்துவன பெருந்திணையாம் என உணர்க.

    இதன்கண் ஒற்றியூர்த் தியாகேசப் பெருமானை, மாடவீதியில் உலா வரக்கண்ட பெருந்திணைத் தலைவி, அப்பெருமான்பால் மிக்க காமத்து மிடல் பெற்றுத் தான் வேட்கை வடிவினளாகிய திறத்தைத் தோழியின் பால் எடுத்துரைப்பது காணப்படும். திருவுலாக் காட்சியில் தலைவி தலைவன்பால் கொண்ட வேட்கைப் பேறு என்ற பொருளில் இது திருவுலாப் பேறு என வருகிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1493.

     சீரார் வளஞ்சேர் ஒற்றிநகர்த்
          தியாகப் பெருமான் பவனிதனை
     ஊரா ருடன்சென் றெனதுநெஞ்சம்
          உவகை ஓங்கப் பார்த்தனன்காண்
     வாரார் முலைகண் மலைகளென
          வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால்
     ஏரார் குழலாய் என்னடிநான்
          இச்சை மயமாய் நின்றதுவே.

உரை:

      அழகிய கூந்தலை யுடையவளே, சிறப்பு மிக்க வளங்களையுடைய திருவொற்றி நகர்க்கண் கோயில் கொண்டருளும் தியாகேசப்பெருமான் திருவுலா வந்தருளினாராக, ஊரவருடன் கூடிக்கொண்டு சென்று பார்த்தேன்; அந்நிலையில், எனது நெஞ்சின்கண் உவகை பொங்கக் கச்சணிந்த கொங்கைகள் மலையெனத் திரண்டு வளர்ந்தன; கைவளைகள் தாமே கழன்று வீழலுற்றன; நானும் வேட்கை யுருவாய் நின்றொழிந்தேன்; இவ் வேறுபாடு வியப்பாய் இருக்கிறது; இஃதென்னே! எ.று.

     பலரும் கண்டு வியந்து புகழும் வளமுடைமை விளங்க, “சீரார் வளஞ்சேர் ஒற்றி நகர்” என்று கூறுகின்றார். தியாகப் பெருமானை, தியாகேசர், தியாகராசர் என்றலும் உண்டு. பவனி - வீதியுலா. உயர் நிலையில் உள்ள இளமகளிர் தனித்துப் போதல் கூடாதென்ற முறை பற்றி ஊரில் வாழும் மகளிருடன் சென்றது கூறுவாள், “ஊராருடன் சென்று” என்றும், திருவுலாவில் தியாகேசன் திருவுருவை மனம் மகிழ்ச்சி நிறையக் கண்ட துரைப்பாள், “எனது நெஞ்சம் உவகை யோங்கப் பார்த்தனன்காண்” என்றும் இயம்புகிறாள். பார்த்ததனால் தான் எய்திய வேறுபாட்டைக் கூறலுற்றவள், பருவத்துக்கு ஒத்த அளவில் வளர்ந்திருந்த கொங்கைகள், உள்ளத்தில் எழுந்த காமக்கிளர்ச்சியால் பருத்துயர்ந்தன வென்பாள், “வாரார் முலைகள் மலைகளென வளர்ந்த” எனவும், வேட்கை தணியக் கூடல் எய்துவமோ என எழுந்த ஏக்கத்தால் உடம்பு சுருங்க, செறிய அணிந்திருந்த கைவளைகள் கழலலுற்றன என்பாளாய், “வளைகள் தளர்ந்தனவால்” எனவும் தன் தோழிக்குச் சொல்லுகின்றாள். வார் - மார்புக் கணியும் கச்சு. வளர்ந்த: அன்பெறாத அகர வீற்றுத் தெரிநிலை வினைமுற்று. உடலில் தோன்றிய தளர்ச்சியை, வளை மேல் ஏற்றித் “தளர்ந்தன” என்கின்றாள். ஆல்: அசை. அது கேட்கும் தோழி நாணத்தால் கூந்தல் தோன்றத் தலை கவிழ்ந்தாளாக, நிமிர்ந்து தன்னை நோக்கும் பொருட்டு, “ஏரார் குழலாய்” என இசைக்கின்றாள். குழலாய், கூந்தலை யுடையவளே என விளி. இவ்வாறு தான் வேட்கை யுருவினளானதற்குக் காரணம் புலப்படாமையின், “நான் இச்சை மயமாய் நின்றது என்னடி” என வினவுகின்றாள். இச்சை, ஈண்டுக் காதல் வேட்கை. பெருந்திணை நங்கையாதலால், கொங்கை கனத்ததும், வளை கழன்றதும் எடுத்தோதுகின்றாள். இச்சை மிகுதியால் அறிவு மழுங்கினமை புலப்படுத்தவாறு. இதனையே வரும் பாட்டுக்கட்கும் உரைத்துக் கொள்க.

     (1)