பக்கம் எண் :

1497.

     சீலக் குணத்தோர் புகழ்ஒற்றித்
          தியாகப் பெருமான் பவனிஇராக்
     காலத் தடைந்து கண்டேன்என்
          கண்கள் இரண்டோ ஆயிரமோ
     ஞாலத் தவர்கள் அலர்தூற்ற
          நற்றூ சிடையில் நழுவிவிழ
     ஏலக் குழலாய் என்னடிநான்
          இச்சை மயமாய் நின்றதுவே.

உரை:

      ஏலத்தின் நறுமணம் கமழும் கூந்தலையுடைய என் தோழி, சீலமிக்க நற்குணச் சான்றோர் புகழும் திருவொற்றியூர்த் தியாகப் பெருமான் திருவுலா வருவதை இரவுப்போதில் தெருவிற் சென்று கண்டேனாக, எனக்குக் கண்கள் இரண்டா? ஆயிரமா? நிலத்து மகளிர் கண்டு அலர்பேச இடையில் உடுத்த ஆடை அவிழ்ந்தொழிய வேட்கையுருவாய் மாறி நின்றேன்; இஃது என்னே! எ.று.

     சீலமும் குணமும் உடையோர், சீலக் குணத்தோர் எனப்படுகின்றனர். சீலம் - ஒழுக்கம்; கண்டும் கேட்டும் ஒருவர்க்கு எய்துவது; குணம் - பிறப்பிலே உளதாவது. இங்கே குறித்த சீலக் குணத்தோர், நற்சீலமும் நற்குணமும் உடையவர் என்றற் பொருட்டு அடையாது மின்றிப் பொதுப்படப் புகல்கின்றார். இரவுப் போதில் வந்த திருவுலா என்பாள், “இராக் காலத்துக் கண்டேன்” எனவும், பிறர் கண்டு இகழ்வரென எண்ணற் கிடமின்றி இருகண்களாலும் அப்பெருமான் அழகைக் கண்களாற் பருகுவதுபோலப் பார்த்து மகிழ்ந்தேன் என்பாள், “கண்கள் இரண்டோ ஆயிரமோ” எனவும் இயம்புகிறாள். அயல் நின்ற மகளிர் என்னிலை கண்டு பழிதூற்றும்படியாக, ஆசை மிகுதியால் உடல் சுருங்க உடுத்த ஆடை இடையினின்றும் நெகிழ்ந்து நீங்குவதாயிற்று என்பாளாய், “ஞாலத்தவர்கள் அலர் தூற்ற நற்றூசு இடையில் நழுவி விழ” எனவுரைக்கின்றாள். தூசு - ஆடை. அலர் - மகளிர் தம்முட் பேசும் பழிப்புரை. அந்த மகளிர் நினைவு தியாகப் பெருமான்பாற் செல்லாமையின், அவர்களை “ஞாலத்தவர்கள்” எனக் கூறுகிறாள். இரவில் வந்த பவனி கண்டு தான் வேட்ட திறத்தை நினைந்து வியப்பது விளங்க, “என்னடி” எனத் தோழியை வினவுகிறாள்.

     (5)