பக்கம் எண் :

150.

    வேயை வென்ற தோளரிவையர் படுகுழி
        விழுந்தலைந்திடும் இந்த
    நாயை யெப்படி யாட்கொள லாயினும்
        நாதநின் செயலன்றே
    தாயை யப்பனைத் தமரினை விட்டுனைச்
        சார்ந்தவர்க் கருள்கின்றோய்
    மாயை நீக்கி நல்லருள் புரி தணிகைய
        வந்தரு ளிந்நாளே.

உரை:

     உலகியல் மயக்கத்தைப் போக்கி நல்லருள் புரியும் தணிகை மலையை யுடையவனே, தாய் தந்தை உறவினர் முதலிய ஒக்கல் தொடர் பறுத்து உன்னையடைந்த நன்மக்கட்கு அருள் செய்பவனே, நாதனே, மூங்கில் போலும் தோளையுடைய மங்கையர் புணர்ப் பென்னும் பாழுங் குழியில் வீழ்ந்து வருந்தும் நாய் போன்ற என்னை எவ்வகையில் ஆட்கொள்ளினும் அது நின் திருவருட் செயலே யன்றோ? எளியேன் முன் இப்போது வந்தருள்க, எ. று.

     உலக வாழ்க்கை அடுக்கி வந்து வருத்தும் துன்பத்துக்கு மக்கள் அஞ்சி அதனைத் துறந்து நீங்காதபடி அவர்களை யீர்த்துப் பிணித்து அதன்கட் கிடந்து உழலுமாறு மயக்குதலின், வாழ்க்கைத் தொடர்பை “மாயை” என்று குறிக்கின்றார். “மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்” (பலவகை) என்று திருநாவுக்கரசரும், “ஆறு கோடி மாயா சத்திகள், வேறுவேறு தம் மாயைகள் தொடங்கின” (போற்றி) என்று மாணிக்கவாசகரும் கூறுவது காண்க. ஒக்கல் வாழ்வு உய்வு நெறிக்குத் தடையாதலின், “தாயை யப்பனைத் தமரினை விட்டுனைச் சார்ந்தவர்க்கருள் கின்றோய்” என்று பரவுகின்றார். “ஓடி யுய்தலும் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமாகாலே” (புறம்) எனச் சங்கச் சான்றோர் கூறுவர். “சார்ந்தவர்க்கின்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன்” (வல்லம்) என்று ஞானசம்பந்தர் மொழிவது, “சார்ந்தவர்க் கருள்கின்றோய்” என்பதை வலி யுறுத்துகிறது. மனை வாழ்வில் ஆழ்த்துவது, அதனைத் துறந்து சென்று அருள் பெற முயல்வது என்பவற்றுள் எதன்கட் புகுத்தினும் எல்லாம் நின் செயல் என்பாராய், “எப்படி ஆட்கொள லாயினும் நாத நின் செயல் அன்றே” என உரைக்கின்றார். இதனை “இறை பணி நிற்றல்” (சிவஞானபோதம்) என்பர் மெய்கண்டார்.

     இதனால் வடலூர் வள்ளலார் “ஏகனாகி இறைபணி நிற்கும்” எண்ணத்தவராதல் காணலாம்.

     (10)